Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்
மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் உயிரிழக்க நேரிட்டது.
தற்போது மீண்டும் அது போன்ற ஒரு போக்குவரத்து நெருக்கடி மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டது. இப்போக்குவரத்து நெருக்கடி 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எங்கும் செல்ல முடியாமல் நடுவழியில் ஊர்ந்த படி சென்றது.
மும்பை அருகில் உள்ள விரார் என்ற இடத்திற்கு மாணவர்கள் 500 பேர் 12 பஸ்களில் பிக்னிக் சென்றுவிட்டு மும்பையில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் நேற்று மாலை 5.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினர். அவர்களால் காலையில்தான் தங்களது வீட்டிற்குச் செல்ல முடிந்தது. விரைவில் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் சாப்பிடாமல் இருந்தனர்.

ஆனால் அவர்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் சாப்பாடு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதனால், சிலர் அழ ஆரம்பித்தனர்.
இதனால் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கெட் கொடுத்து உதவின. வீட்டிற்கு மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் பெற்றோர்களும் அச்சம் அடைந்தனர். மாணவர்கள் அனைவரும் 5 முதல் 10வது வகுப்பு வரை படிக்கக்கூடியவர்கள் ஆவர்.
இது குறித்து வசாய்-விரார் போக்குவரத்து துணை கமிஷனர் பூர்ணிமா கூறுகையில், ''போக்குவரத்து காலை வரை சரியாகவில்லை. சில அடி நகரவே மணிக்கணக்கில் எடுத்துக்கொண்டது.
தானே கோட்பந்தர் நெடுஞ்சாலையில் பழுதுபார்ப்புப் பணி நடந்து வந்ததால் கனரக வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டதால் இந்தப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.
மாலை 5 மணிக்குப் புறப்பட்ட மாணவர்களின் பஸ்கள் காலை 6 மணிக்குத்தான் போய் சேர வேண்டிய இடத்திற்குப் போய்ச்சேர்ந்தது.

தானேயில் போக்குவரத்து நெருக்கடியில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியதால் விபத்தில் காயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்துபோனார். வினோத் பாட்டீல் என்ற பொறியாளர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மீது இடித்து படுகாயம் அடைந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.
அவரை போலீஸார் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் தானே-பீவாண்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. இதனால் காயம் அடைந்த வினோத் பாட்டீல் பரிதாபமாக உயிரிழந்தார்.