அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை
முல்லைப்பெரியாறு அணை; தளவாட பொருள்களுக்கு தடைபோடும் கேரளா- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
தென் தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக இருக்கக்கூடியது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீரை நம்பி மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில் அணை பலவீனமாக உள்ளதாக 1979 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் அணை பலப்படுத்தப்பட்டு, பலமுறை நிபுணர்கள் குழு மூலம் ஆய்வு நடத்தி அணை வலுவாக உள்ளதாக நிரூபித்திருக்கிறது. இருப்பினும் அணை தொடர்பாக கேரளா அரசியல்வாதிகளும், சில அமைப்பினரும் அணைக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பராமரிப்புக்கு பல்வேறு இடையூறுகளை கேரள அதிகாரிகள் கொடுத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நான்கு யூனிட் எம்-சாண்ட் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை 2 லாரிகளில் தமிழக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
அப்போது கேரள நீர்வளத்துறையின் பரிந்துரை கடிதம் இல்லாமல் லாரிகளை உள்ளே அனுப்ப முடியாது என வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் வல்லக்கடவு சோதனை சாவடி அருகே லாரிகள் நிறுத்தப்பட்டன. ஒரு வாரமாக காத்திருந்தும் அனுமதிக்கபடாததால் எம்-சாண்ட் மண்ணை சோதனை சாவடிக்கு அருகே கொட்டிவிட்டு 2 லாரிகள் தமிழகம் திரும்பின.
அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள வனத்துறையினரிடம் மட்டுமே இதுவரை தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கேரள நீர்வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையை கேரள அரசு கொண்டு வந்திருக்கிறது. இதற்கிடையே அணை விவகாரத்தில் தொடர்ச்சியாக இடையூறு செய்துவரும் கேரள அரசை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
மேலும் அணை நீர் பிடிப்பு பகுதியில் படகு போக்குவரத்து உரிமை, மீன்பிடிப்பு உரிமை, தமிழக போலீஸ் பாதுகாப்பு உரிமை, குமுளி முதல் தேக்கடி படகு நிறுத்தப் பகுதி வரையிலான சாலை பயன்பாட்டு உரிமை என அணை தொடர்பான அனைத்து உரிமைகளையும் தமிழகம் இழந்து வருகிறது. இதையெல்லாம் மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.