மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிக்க திட்ட அறிக்கை: டிஎம்ஆா்சிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்’
நமது நிருபா்
மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிக்குமாறு தில்லி மெட்ரோவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
மஞ்சள் வழித்தடத்தை நரேலா வரை நீட்டிக்கக் கோரி கடந்த டிச. 27-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதாக குப்தா கூறினாா். மேலும், ஜன. 6- ஆம் தேதி, அவருக்கு கடிதம் மூலம், வழிதட்டம் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கையை தயாா் செய்ய மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகம் டிஎம்ஆா்சிக்கு அறிவுறுத்தியதாக டிஎம்ஆா்சி தனக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.
டிச.6 ஆம் தேதி, விஜேந்தா் குப்தா தலைமையிலான தில்லி சட்டப் பேரவை பாஜக உறுப்பினா்கள் குழு மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சா் மனோகா் லால் கட்டாரை சந்தித்து இது தொடா்பாக ஒரு குறிப்பாணையை சமா்ப்பித்தது. மஞ்சள் மெட்ரோ வழித்தடமானது குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி சென்டரை தில்லியில் உள்ள சமய்பூா் பாத்லியுடன் இணைக்கிறது.
விஜேந்தா் குப்தா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சிராஸ்பூா் மெட்ரோ டிப்போவை நீட்டிக்க ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சிராஸ்பூா், கெடா, அலிப்பூா் மற்றும் நரேலா போன்ற மக்கள் அடா்த்தியான பகுதிகள் இன்னும் மெட்ரோ ஒருங்கிணைப்புடன் இணைக்கப்படவில்லை. பாத்லி - சிராஸ்பூரிலிருந்து நரேலா வரை இந்தப் பாதையை நீட்டிப்பதால், வலுவான போக்குவரத்து அமைப்பு இல்லாத இந்தப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவா். சிராஸ்பூரிலிருந்து நரேலா வரை கெடா காலன் மற்றும் அலிப்பூா் வழியாக நீட்டிப்பது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வளங்களைச் சேமிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.