நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
மேக்ஸ்வெல் அதிரடி: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனின் காபா திடலில் நடைபெற்றது. மோசமான வானிலை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால், 20 ஓவர்கள் 7 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷார்ட் மற்றும் ஃப்ரேஸர் மெக்கர்க் இருவரும் முறையே 7 மற்றும் 9 ரன்னில் வெளியேற அவர்களுக்குப் பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டினார். 19 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப அதன்பின்னர் வந்த டிம் டேவிட் 10 ரன்களும், மார்க்கஸ் ஸ்டானிஸ் 7 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 7 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது.
பின்னர் 7 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அந்த அணியால் 7 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அப்பாஸ் அஃப்ரிடி 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் சேவியர், நாதன் எல்லீஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி வருகிற நவ. 16ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது.