நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
ரஞ்சி கோப்பையில் 300* ரன்கள் விளாசிய மஹிபால் லோம்ரோர்!
ரஞ்சிக் கோப்பையில் உத்தரகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இடதுகை ஆட்டக்காரர் மஹிபால் லோம்ரோர் 360 பந்துகளில் 300* ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திடல்களில் நடைபெற்றுவருகின்றன.
இதில், ராஜஸ்தான் - உத்தரகண்ட் அணிகள் மோதும் போட்டி டேராடூனில் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற உத்தரகண்ட் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியில் 3-வது வரிசையில் களமிறங்கிய 24 வயதான மஹிபால் லோம்ரோர் 360 பந்துகளில் 25 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களுடன் 300* ரன்கள் குவித்தவுடன் ராஜஸ்தான் கேப்டன் தீபக் ஹூடா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
ராஜஸ்தான் அணி 145.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 660 ரன்கள் குவித்தது.
300 ரன்கள் குவித்த மஹிபால் லோம்ரோர் இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 133 ரன்கள் அடித்துள்ளார். இவர் கார்த்திக் சர்மா மற்றும் பரத் சர்மா இருவருடனும் தலா 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார்.
லோம்ரோர் இதுவரை முதல்தரப் போட்டிகளில் 7 சதங்கள், 16 அரைசதங்களுடன் 3000 ரன்கள் விளாசியுள்ளார்.
7 ஐபிஎல் சீசன்களில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ள இவர் இதுவரை ஒருமுறைகூட ஒரு சீசனில் 200 ரன்களுக்கு மேல் குவித்தது கிடையாது. 2024 ஆம் ஆண்டு 183 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 125 ரன்கள் எடுத்திருந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய லோம்ரோரை அந்த அணி தக்கவைத்துக் கொள்ளவில்லை. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் 24, 25 ஆம் தேதி நடக்கும் மெகா ஏலத்தில் அவர் அதிக தொகைக்கு விலை போகலாம் அல்லது பெங்களூரு அணியே அவரை அதிக விலையில் தக்கவைத்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.