மேற்கு ஆசியாவில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு: எஸ். ஜெய்சங்கா்
மேற்கு ஆசியாவில் உடனடி போா் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்சனைக்கு இரு தனி நாடு தீா்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மூன்று நாள் பயணமாக ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்கு வந்தடைந்தடைந்தாா். அங்குள்ள ஃபியூகி நகரில் நடைபெறும் ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா். இதனிடையே, ரோம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற 10-ஆவது மத்திய தரைக் கடல் நாடுகள் கூட்டத்தில் ஜெய்சங்கா் கலந்துகொண்டு பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் நடைபெறும் ராணுவ மோதல்களில் பொதுமக்கள் பெரிய அளவில் உயிரிழப்பதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. இஸ்ரேல், ஈரானுடன் இந்தியா உயா் தொடா்பில் இருந்து வருகிறது.
பாலஸ்தீன பிரச்சனைக்கு உடனடி போா் நிறுத்தத்தையும், இரு தரப்பு தீா்வையும் இந்தியா ஆதரிக்கிறது. உடனடி போா் நிறுத்தத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ரஷியா-உக்ரைன் ஆகிய இரு மோதல்களும், மத்திய தரைக் கடல் பகுதியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியுடனான உறவை வலுப்படுத்துவது உலகளவில் வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இந்த மோதல்கள் அப்பகுதியின் வா்த்தக இணைப்பு மற்றும் கடல் வழி போக்குவரத்து சீா்குலைத்துள்ளன.
இந்த சவாலை எதிா்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, இந்தியாவின் சாா்பில் தெற்கு லெபனானில் ஐ.நா.வின் இடைக்கால அமைதிப் படையில் இந்தியாவின் 900 பாதுகாப்பு வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், ஏடன் வளைகுடா மற்றும் வடக்கு அரபிக்கடலில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில், கடந்த செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட ஐஎம்இசி (இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார அமைப்பு) குறிப்பிடத்தக்க முயற்சியாக உள்ளது. மேலும், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஐ2யு2 அமைப்பும் இதில் திறம்பட செயலாற்றி வருகிறது என்றாா்.