கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை...
'ரஜினி சார் நம்பி வந்தால் நம்பிக்கையை காப்பாற்றுவேன்' - மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கோவையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

அப்போது மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்டவை. அந்த வகையில் இந்த படத்துக்கும் மக்கள் ஆதரவு நன்றாக இருப்பது மகிழ்ச்சி.
பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார்கள். என்னுடைய படங்கள் இவ்வாறு இருக்கும், என்னுடன் வேலை செய்வது இவ்வாறு தான் இருக்கும் என்று என்னை நம்பி அவர் வந்தால் அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். சமூகத்தில் ஜாதிகளை மாத்திரை போடுவது போன்று காலி செய்துவிட முடியாது.
ஜாதி என்பது தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் ஒரு வாழ்வியல் முறையாக உள்ளது. நான் மட்டுமல்ல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலரும் ஜாதிக்கு எதிராக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
சினிமாவிலும் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.” என்றவரிடம், ‘உங்களின் அனைத்து படங்களிலும் ஒரு விலங்கை குறிப்பிட்டு, அதனை கொல்வது போன்று படம் எடுக்கப்படுவது’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாரி செல்வராஜ், “மனிதனை கொல்வதற்கு பயமாக உள்ளது.

வணிக ரீதியான படங்களில் எவ்வளவு மனிதர்களை கொன்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நான் சமூகத்தையும், உண்மையையும் வைத்து படம் எடுக்கிறேன். எனவே மனிதர்கள் இறப்பது போல படம் எடுத்தால் அது என்னுடைய பொறுப்பு. அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.” என்றார்.