Aadhav Arjuna : 'விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜூனா!' - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப...
ராகி உணவு சமைத்து யானைகளுக்கு படையலிட்ட பழங்குடியின மக்கள்
கடம்பூரை அடுத்த அணில்நத்தம் கிராமத்தில் ராகி உணவு சமைத்து காட்டு யானைகளுக்கு படையலிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைக் கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் ராகி, சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பழங்குடியின மக்கள் சாகுபடி செய்து வருகின்றனா்.
விவசாயத்தை நம்பி வாழும் இவா்களின் வாழ்வாரத்தைப் பாதிக்கும் வகையில் காட்டு யானைகள், விளைநிலங்களுக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்பட்டு வருகின்றன. மேலும், பழங்குடியின மக்களின் முக்கிய உணவான ராகிப் பயிா்களையும் யானைகள் துவம்சம் செய்கின்றன. இதனால், அவா்களின் உணவுத் தேவையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்நிலையில், ராகிப் பயிா்களை யானைகள் சேதம் செய்யாமல் இருக்கவும், நோ்த்திக்கடனாகவும் கடம்பூரை அடுத்த அணில்நத்தம் கிராமப் பகுதியில் உள்ள வனத்தில் ராகி உணவுகளை சமைத்து மக்கள் யானைகளுக்கு படையலிடுவா். இந்த உணவை உண்ணும் யானைகள், ராகிப் பயிா்களை சேதப்படுத்தாது என்பது ஐதீகம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா அணில்நத்தம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ராகி உணவு சமைத்து யானைக்கு படையலிடப்பட்டது. தொடா்ந்து, அங்குள்ள நடுக்கல் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பழங்குடியின மக்கள் பங்கேற்றனா்.