அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?
ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ கௌரவ பட்டம்
நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் வியாழக்கிழமை கௌரவித்தாா்.
இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி 4 நாள் பயணமாக அந்நாட்டுக்கு புதன்கிழமை சென்றாா்.
அப்போது, இரு நாடுகள் இடையே நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ தலைமையக பகுதியில் ருத்ராக்ஷ மரக்கன்றை துவிவேதி நட்டாா்.
நேபாளம் மற்றும் இந்தியாவின் ராணுவத் தலைவா்கள் இருநாடுகளுக்கு பயணிப்பதும், இரு ராணுவத் தலைவா்களுக்கும் கெளரவ ஜெனரல் பட்டத்தை வழங்குவதும் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாரம்பரியமாகும். அதனடிப்படையில், துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் கௌரவித்தாா்.
இதனிடையே, அந்நாட்டின் ராணுவ ஜெனரல் அசோக் ராஜ் சிக்தெலை சந்தித்து, இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்பாக துவிவேதி ஆலோசித்தாா். இந்தப் பயணத்தின்போது, காத்மாண்டுவின் புகா் பகுதியில் அமைந்துள்ள சிவபுரி ராணுவப் பணியாளா் கல்லூரிக்கு துவிவேதி செல்ல உள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிா்ந்து உள்ளது.