'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள் அச்சம்
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட வச்சினம்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்புப் பகுதியில் உலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட லிங்காபுரம்,காந்த வயல்,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை பாகுபலி, விவசாய நிலங்களில் புகுந்து அங்கிருந்த பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வச்சினம்பாளையம் பகுதியில் ரங்கசாமி(50) என்பவரது விவசாய நிலத்திற்குள் நுழைந்த பாகுபலி யானை அங்கு கால்நடைகளுக்காக வளர்க்கப்பட்டு வந்த மசால் புற்களை மேய்ந்து கொண்டு இருந்துள்ளது.தொடர்ந்து யானையின் சப்தம் கேட்டு விவசாயிகள் அங்கு வந்து பார்த்த போது யானை குடியிருப்பின் அருகே வந்து விட்டது. இதையறிந்த கிராம மக்கள் யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கவும், விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை மேலும் சேதப்படுத்தி விடாமலும் பாதுகாத்திட ஒற்றை காட்டு யானையை விடிய, விடிய விழித்திருந்து வனப் பகுதிக்குள் போகுமாறு டார்ச் லைட் அடித்தும், சப்தமிட்டு விரட்டியதால் காட்டு யானை பாகுபலி அங்கிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றது.
இதையும் படிக்க |28 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
குடியிருப்பு பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி விடுமோ? என ரங்கசாமியின் குடும்பத்தினர் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த காட்டு யானை பாகுபலியை ரங்கசாமி குடும்பத்தினர் விடியோவாக பதிசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.
ரஜினி படம் கபாலியில் கூறுவது போல் மீண்டும் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என தொடர்ந்து சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, மனிதர்களையும் பாகுபலி யானை அச்சுறுத்தி வருவதால் அந்த பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.