ராமேஸ்வரம்: கார் விபத்தில் மூவர் பலி; கோயிலுக்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கருடாமுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்திருந்தனர். தங்கள் ஊரில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு கலச நீர் எடுத்து செல்ல ராமேஸ்வரம் வந்த இவர்கள், இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தமாடி சாமி தரிசனம் செய்த பின்னர் கலச நீரை எடுத்து சென்றனர்.
நேற்று பகல் 12 மணியளவில் ராமநாதபுரம் அருகே உள்ள களத்தாவூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த நாகராஜன், தீபக், சண்முகசுந்தரம் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவரான கார்த்திகேயன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்த கார்த்திகேயனையும் மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கார்த்திகேயன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் கும்பாபிஷேகத்திற்காக கலச நீர் எடுத்து வர சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.