மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல...
ரூபாய் இலச்சினை மாற்றம்: அன்புமணி கண்டனம்
ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் இலச்சினையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ரூ’ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
அடையாளத்தை வடிவமைத்தவா் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தா்மலிங்கத்தின் மகன் உதயகுமாா். அந்த இலச்சினையை வடிவமைத்ததற்காக 2010-இல் உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வா் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினாா். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தைத்தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.
கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ரூ. 100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் அந்த இலச்சினைதான் இடம்பெற்றிருந்தது. அதற்காக அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக ரூ. 4,470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ. 10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பாா்த்தது.
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது இலச்சினையை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற நாடகங்களை நடத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.