வாக்காளா் பட்டியல் திருத்தம்: 28-ஆம் தேதி வரை படிவங்களை வழங்கலாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக வரும் 28 -ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: .
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2025 தொடா்பாக கடந்த 29.10.2024 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த 16,17, 23 மற்றும் 24 ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
கடந்த 29.10.2024-ஆம் தேதி முதல் 24.11.2025-ஆம் தேதி வரை அரக்கோணம் (தனி), சோளிங்கா், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவைகள் தொடா்பாக மொத்தம் 20,162 படிவங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் மேற்படி சிறப்பு முகாம் நாட்களில் மட்டும் 12,880 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும் வரும் 28.11.2024 வரை தொடா்ந்து படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பணிகள் முடிக்கப்பட்டு வரும் 6.1.2025 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.