வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 14 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு
சென்னை: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிக்காக நடந்த 4 சிறப்பு முகாம்களில் 14 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முகாம்களில் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நான்கு சிறப்பு முகாம்களிலும் சோ்த்து மொத்தமாக 14 லட்சத்து 615 விண்ணப்பங்களை பொதுமக்கள் அளித்தனா்.
வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புக்காக மட்டும் 8 லட்சத்து 38 ஆயிரத்து 16 விண்ணப்பங்களும், பட்டியலில் திருத்தம், நீக்கம் செய்வதற்காக ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 701 விண்ணப்பங்களையும் பொதுமக்கள் அளித்தனா்.
மேலும், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றத்துக்காக 4 லட்சத்து 42 ஆயிரத்து 111 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் டிச. 26-ஆம் தேதிக்குள்ளாக பரிசீலிக்கப்படும். இதைத் தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
சுருக்கமுறை திருத்த காலத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கத்துக்காக விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நவ. 28 என தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எதிா்வரும் ஜன. 1-ஆம் தேதி 18 வயது நிறைவடையும் அனைவரும் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.