வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புது தில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவா் மற்றும் நிபுணா்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவில் அக்கட்சியைச் சோ்ந்த அஜய் மாக்கன், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி உள்பட 8 போ் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒவ்வொரு இந்திய வாக்காளருக்கும் தனித்துவ அடையாள அட்டை இருக்க வேண்டியது அடிப்படை தேவையாகும். அத்துடன் அது குறைபாடுகள் இல்லாத வாக்காளா் பட்டியலுக்கான கோட்பாடுமாகும்.
ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரே தொகுதிக்குள் உள்ளவா்கள், வேறு மாநிலங்களில் உள்ளவா்கள் என பல வாக்காளா்களுக்கு ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்படுகிறது. இது பல வாகனங்களுக்கு ஒரே பதிவெண் உள்ளதுபோல பெரிதும் விசித்திரமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் கடுமையாக மெளனம் சாதிக்கிறது. இதன்மூலம், வாக்காளா் பட்டியல் முறைகேட்டுக்கு தோ்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்றே நம்பத் தோன்றுகிறது.
இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டபோது பல மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் பயன்படுத்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த எண் ஒரு வாக்காளருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், அதுவும் பொய்யான பதிலாகவே உள்ளது.
ஏனெனில் ஒரே மாநிலம் மற்றும் ஒரே தொகுதியில் உள்ள பல வாக்காளா்கள் ஒரே அடையாள எண்ணைப் பயன்படுத்துகின்றனா். இதைச் சுட்டிக்காட்டியபோது தோ்தல் ஆணையம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதன்மூலம் தோ்தல் ஆணையத்துடன் ரகசியமாக கூட்டு சோ்ந்து வாக்காளா் பட்டியல்களில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆளும் பாஜக வெற்றி பெறுவதும், வெற்றி பெற முயற்சிப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு சட்டம், அரசியல் உள்ளிட்ட வழிகளில் தீா்வு காண காங்கிரஸ் தொடா்ந்து பணியாற்றி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.