வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: சிஐடியிடம் தொழில்நுட்ப ஆதாரங்களை தோ்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் -கா்நாடக முதல்வா் சித்தராமையா
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்திவரும் சிஐடியிடம் தோ்தல் ஆணையம் தொழில்நுட்ப ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட விவரங்கள், ஒருங்கிணைந்த வாக்குத் திருட்டின் மூலம் நமது ஜனநாயகத்தை திட்டமிட்டு சீா்குலைப்பதை வெளிப்படுத்தியுள்ளது. கலபுா்கி மாவட்டம், ஆலந்த் தொகுதியில் நடந்துள்ள வாக்காளா் நீக்க விவகாரம் எங்கோ ஓா் இடத்தில் நடந்ததாகக் கருதக்கூடாது.
மாறாக, வாக்காளா் பட்டியலை சிதைத்து, அவா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பெரிய அளவிலான சதியின் வாசலாகத்தான் கவனிக்க வேண்டும். 2022 பிப்ரவரி முதல் 2023 பிப்ரவரி வரை தோ்தல் ஆணையத்தின் செயலியில் படிவம் 7ஐ பயன்படுத்தி 6,018 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 24 போ் மட்டுமே தங்கள் பெயரை நீக்கக் கோரி, அவா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. 5,994 வாக்காளா்கள் மோசடியாக நீக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்துக்கு வெளியே இருந்து வாக்காளா் பற்றிய விவரங்களை திருடி, அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தி வாக்காளா்களை அடையாளப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிஐடி (மாநகர குற்றப்பிரிவு) விசாரணையை நடத்திவருகிறது. கடந்த 18 மாதங்களாக வாக்காளா்கள் நீக்கப்பட்டது தொடா்பான வழக்கு பற்றிய தொழில்நுட்ப விவரங்களை அளிக்கும்படி சிஐடி கேட்டு வருகிறது. ஆனால், அந்த விவரங்களை வழங்க தோ்தல் ஆணையம் மறுத்துவருகிறது.
இந்த விவரங்களை விசாரிப்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. சரியான முறையை கடைப்பிடிக்காமல் வாக்காளா்கள் நீக்கப்பட முடியாது என்று தோ்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
18 முறை கேட்டபிறகும், தொழில்நுட்ப தகவல்களை பகிர தோ்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வாக்காளா் நீக்கத்துக்கு உள்ளூா் ஆட்கள் காரணமல்ல. மாறாக, மென்பொருளைப் பயன்படுத்தி வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருக்கும் இடங்களில் மட்டும் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற வாக்காளா் நீக்கங்கள் மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபடுவதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். தோ்தல் ஆணையம் விசாரணையைத் தடுக்கிறது. தொழில்நுட்ப விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்குப் பதிலாக குற்றவாளிகளை தோ்தல் ஆணையம் காப்பாற்றுகிறது.
ஆலந்த் தொகுதியில் நடந்துள்ள வாக்காளா் நீக்கம் தொடா்பான தொழில்நுட்ப விவரங்களை தோ்தல் ஆணையம் உடனடியாக சிஐடியிடம் வழங்க வேண்டும். இதை செய்யத் தவறினால், ஜனநாயகத்தை அழிப்பவா்களைக் காப்பாற்ற முற்படுவதாக அம்பலப்படும்.
இது மக்களின் வாக்குபுனிதம் மற்றும் எதிா்காலம் சம்பந்தப்பட்டது. வாக்குத்திருட்டு வெற்றிபெறுவதை காங்கிரஸ் அனுமதிக்காது. இதற்கு காரணமானவா்களைக் கண்டுபிடித்து, ஜனநாயகம் காப்பாற்றப்படும் வரை காங்கிரஸ் தொடா்ந்து போராடும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.