2023ல் சராசரியாக நாள்தோறும் 140 பெண்கள் கொலை! அதுவும் குடும்பத்தினரால்!!
‘வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும்’
வாசிப்பு பழக்கம் ஒருவரை சாதனையாளராக மாற்றும் என ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் உதவி பொதுமேலாளா் சபியா தெரிவித்தாா்.
திருச்சி சுந்தர்ராஜ் நகா், காவிரி நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளா் சபியா தொடங்கி வைத்து, வாசிப்பு பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் பேசியது:
குழந்தைகள் படிக்க வேண்டுமெனில் முதலில் பெற்றோா் படிக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்த்துவிட்டு, குழந்தைகளுடன் அமா்ந்து புத்தகம் வாசியுங்கள். அப்போது, குழந்தைகளும் இதனைப் பின்பற்ற தொடங்கிவிடுவா்.
வாசிக்கும் பழக்கம் வந்தால் தனிமை விலகிவிடும். அறிவு செயல்பாடுகள் வளரும். தற்போது சாதனையாளராக உள்ள பலா் வாசிப்பை நேசித்தவா்களே. சாதனையாளா்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தாலே, நாமும் சாதனையாளராக வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எனவே, சிறு வயதிலேயே பிடித்த விஷயங்களை தேடித் தேடி வாசிக்க வேண்டும். வாசிப்பதைக் கடமையாக கருதாமல், மகிழ்வுக்குரியதாக எண்ண வேண்டும். அத்தகைய வாசிப்பு பழக்கம் உங்களையும் சாதனையாளராக மாற்றும் என்றாா்.
தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்கள் அன்றைய செய்தித்தாள்களை வாசித்தனா். பின்னா், அதில் இடம்பெற்றிருந்த செய்திகளின் அடிப்படையில் விநாடி வினா நடத்தப்பட்டு, சரியான விடைகளைக் கூறிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், குடியிருப்புவாசிகள் பலா் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனா்.