`விஜய் போலதான் நானும்... 'உச்ச நடிகராக' இருக்கும்போது அரசியலுக்கு வந்தேன்' - சரத்குமார் பேச்சு!
சென்னையில் தொண்டர்களைச் சந்திக்கும் விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் சரத்குமார். அப்போது விஜய் அரசியல் குறித்தும், பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
விஜய் பற்றிய கேள்விக்கு, "விஜய் திராவிடம், தமிழ் தேசியம் இரண்டும் தனது கொள்கைகள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவரை கொள்கை ரீதியாக விமர்சிக்க விரும்பவில்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கிறார் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார், மற்றவர்களை விட எதில் சிறப்பாக செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஊடகங்கள்தான் அவர் இன்று கட்சித் தொடங்கி, நாளை சாதித்துவிடுவதுபோல பேசுகின்றனர். அவரைப் பற்றி தொடர்ந்து கேட்பதனால் அரசியல் தலைவர்களும் பேசவேண்டியிருக்கிறது." என்று பேசினார்.
விஜய் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து, "அரசியலுக்கு வருபவர்கள் இவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒரு பேக்கிரிகாரருக்கு எதிரில் மற்றொரு பேக்கிரி கடை வைக்கும்போது அதைப் பற்றித் தவறாகத்தான் பேசுவார்கள். அதனால், விஜய்யை விமர்சிக்கக் கூடாது என்று கூற முடியாது" என்றார்.
பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்து, "எந்த கட்சியும் ஒரே நாளில் வளர்ந்துவிடவில்லை. பா.ஜ.க கடந்த தேர்தலில் தனித்து 11.37 சதவீதம், கூட்டணியுடன் 18% வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது 25 சதவீதமாக 30 சதவீதமாக வளர முடியும்."
"1996-ம் ஆண்டு புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியை எதிர்த்தேன் நான். விஜய் சொல்வதுபோல அப்போது உச்ச நடிகர்தான் நான். பெரிய பெரிய வெற்றிகள் கொடுத்தபோது நான் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன்.
நாங்கள் இயக்கம் தொடங்கியபோது இரண்டு பெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம். இப்போது தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.
இன்று உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு நற்பெயர் இருப்பதற்கு பிரதமர் மோடிதான் காரணம். இன்று உக்ரைன் அதிபர், மோடிதான் இந்தப் போரை நிறுத்த முடியும் என்று கூறுகிறார். இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்று புதின் கூறுகிறார். மோடியால் இந்தியாவின் பெருமை உயர்ந்துவிட்டது." என்று பேசினார்.