ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - ...
விண்வெளியில் தீக்குச்சியைப் பற்ற வைத்தால் என்னவாகும்? - சீன வீரர்கள் நடத்திய திக் திக் சோதனை!
சீன விண்வெளி வீரர்கள், தங்கள் விண்வெளி நிலையத்தில் தீக்குச்சியைப் பற்ற வைத்து சோதனை நடத்திருக்கின்றனர்.
இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சீனாவின் ‘தியாங்கோங்’ (Tiangong) விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வரும் விண்வெளி வீரர்களான குய் ஹைச்சாவோ மற்றும் ஜு யாங்ஜு அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுடன் நேரலையில் கலந்துரையாடியிருக்கின்றனர். அப்போது, புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் ஒரு நெருப்புச் சுடர் எப்படி எரியும் என்பதை விளக்க, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயன்றனர்.
அவர்கள் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தபோது, அந்த நெருப்புச் சுடர் நாம் பூமியில் பார்ப்பது போல் இல்லாமல் ஒரு கோள வடிவில் நிலையாக, நீல நிறத்தில் எரிவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

விண்வெளியில் தீயின் வடிவம் ஏன் மாறுகிறது?
பூமியில் நாம் ஒரு தீயை ஏற்றும்போது வெப்பக் காற்று, அடர்த்தி குறைவாக இருப்பதால், மேல்நோக்கி எழும்புகிறது. இந்த நிகழ்வான ‘வெப்பச்சலனம்’, கீழே இருந்து குளிர்ச்சியான, ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை இழுத்து, நெருப்புச் சுடருக்கு ஒரு கண்ணீர்த் துளி போன்ற வடிவத்தைக் கொடுக்கிறது.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத வெப்பச்சலனம் என்ற நிகழ்வே நடைபெறாது. சூடான வாயுக்கள் மேல்நோக்கி எழும்பாது. இதனால் நெருப்புச் சுடர், தன்னைச் சுற்றி இருக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி, அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பரவி, ஒரு கோள வடிவத்தை அடைகிறது.
சோதனைக்கான காரணம் என்ன?
இந்த எளிமையான சோதனை, விண்வெளியில் வெப்பம், காற்று, மற்றும் எரிதல் ஆகியவை எவ்வாறு வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சீனாவின் தியாங்கோங் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த நேரடியான சோதனை, விண்வெளி அறிவியலின் ஒரு சிக்கலான தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.



















