விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
முழுக்கோடு மாத்தூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (49). தொழிலாளியான இவா் தனது நண்பா் ரவி என்பவருடன் கடந்த 19ஆம் தேதி அம்பலக்காலை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம்.
இதில், காயமடைந்த இருவரையும் அவ்வழியே சென்றோா் மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா்கள் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு, கனகராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.