Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" - பட விழாவில்...
``விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம், முறைகேடு'' - திமுக-வுக்கு சீமானின் 9 கேள்விகள்
மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்ட நெல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒருபக்கம் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன; மறுபக்கம், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் அரசின் தாமதத்தால் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கநிலையில் இருக்கின்றன.
நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் தான், தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மறுபக்கம், தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரைக்கும் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம்தான் நெல் மூட்டைகள் தேங்கக் காரணம்” என்று மத்திய அரசைக் காரணம் காட்டினார்.
சீமானின் 9 கேள்விகள்
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து 9 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சீமான் கூறியதாவது:
“விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
நெல் கொள்முதல் செய்ய தாமதம்
சம்பா சாகுபடியில் தற்போது விளைந்துள்ள நெற்பயிர்கள் ஒருபுறம் மழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருநட்டம் ஏற்பட்டுள்ள சூழலில், மறுபுறம் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட குறுவை சாகுபடி நெல் மூட்டைகளையும் தி.மு.க. அரசு கொள்முதல் செய்ய தாமதிப்பதன் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு உற்பத்தி செலவுக்கு இணையான மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து, விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றது. அக்குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் உரிய நேரத்தில் நெல் கொள்முதலை தி.மு.க. அரசு செய்ய மறுப்பதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமை.

ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?
நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், இத்தனை தாமதத்திற்கு பிறகு தற்போது ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி முதல்வர் வெறுமனே கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
மூட்டைக்கு 40 ரூபாய்
நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் பெறப்படும் முறைகேட்டைத் தடுக்க தி.மு.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நிலையில், அதற்கேற்ற உரிய கொள்முதல் ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறியது ஏன்?
அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகள் தொடங்கி, ஆளும் கட்சி பிரமுகர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகளின் நெல் மூட்டைகளையெல்லாம் கொள்முதல் செய்த பிறகே ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் அவலம் மாறுவது எப்போது?

சேமிப்பு கிடங்கு கட்டவில்லையே ஏன்?
தி.மு.க.-வின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம், பல்லாயிரம் கோடிகள் முதலீடு, பல இலட்சம் வேலைவாய்ப்பு, இருமடங்கு பொருளாதார வளர்ச்சி என்று வெற்றிப் பெருமை பேசும் தி.மு.க. அரசால், தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளைப் பாதுகாக்கக் கூட போதிய சேமிப்பு கிடங்குகளைக் கட்ட முடியவில்லையே ஏன்?
பல நூறு கோடிகளில் மதுரையில் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கம், சென்னையில் கலைஞர் கலையரங்கம் கட்டும் தி.மு.க. அரசு; கார் பந்தயம் நடத்தவும், சமாதி கட்டவும் பல நூறு கோடிகளை வாரி இறைக்கும் தி.மு.க. அரசு நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டாமல் வெட்டவெளியில் தார்ப்பாய்களால் மூடி வைப்பது ஏன்?
சாக்குப் பைகள், சணல், தார்ப்பாய்கள்கூட இல்லை
நெல் கொள்முதல் செய்வதற்கு போதிய சாக்குப் பைகள், சணல் கையிருப்பு இல்லை; மூடி வைக்க தார்ப்பாய்கள்கூட இல்லை; ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகே வியக்கும் நான்கரை ஆண்டுகால சாதனையா?
தி.மு.க. அரசு வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டதால் விளைந்த நன்மை என்ன? தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரித்ததாகக் கூறும் தி.மு.க. அரசு, தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு என்ன காரணம் கூறப்போகிறது?

ஊழல் முறைகேடு
ஏற்கெனவே, பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்காமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு கொள்முதல் செய்ய மறுப்பது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை வீணடித்து வறுமையில் வாடச் செய்யும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல், சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமெனவும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப் படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.