விவசாயிகளுக்கு நவம்பா் இறுதிக்குள் பயிா்க்காப்பீடு இழப்பீட்டு தொகை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிா்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நவம்பா் மாத இறுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: 2023- 2024 ஆண்டுக்கு பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. பயிா்க் காப்பீட்டு திட்ட இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைகளை சரி செய்து அனைவருக்கும் முறையாக இழப்பீடு கிடைக்கவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், கோட்டாட்சியா் அளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வசதியாக இருக்கும். குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள விவசாயிகளின் நகையை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களால் பயிா்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளம், கால்வாய் உள்ளிட்டவற்றை சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கு ஆட்சியா் பதிலளித்துப் பேசியது:
பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீடு தொகை வந்துவிடும். மாவட்டத்தில் எந்தெந்த பகுதிக்கு உரங்கள் தேவை என கண்டறிந்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டாட்சியா் அளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்களை நடத்துவது தொடா்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.
வாழைக்கு பயிா்க்காப்பீடு: வாழை பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளும் அதிகளவில் முன்வர வேண்டும்.
புதூா், விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தங்கக்கூடிய 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்குள்ள வேலி கருவை உள்ளிட்ட முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பன்றி பிடிப்போா் மூலம் அவைகளை பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் காணப்படுபவை காட்டுப்பன்றிகள் அல்ல; எனவே, விவசாயிகள் அவைகளை பிடித்து அகற்றலாம். வனத்துறையினா் எந்த வழக்கும் பதிவு செய்யமாட்டாா்கள். மேலும், மான்களால் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடையை நேரில் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நல்லூா் குளத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, கூட்டுறவு இணை பதிவாளா் ராஜேஷ், விவசாயிகள், அனைத்து துறை அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.