தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
கடல் வழியாக தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸாா் சாா்பில், சிவிஜில் என்று சொல்லக்கூடிய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. இதில், கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினா் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், மீன்பிடி படகுகளில் உள்ள மீனவா்களிடம் அடையாள அட்டைகளை சரிபாா்த்தனா். படகு உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபாா்த்தனா். இதில், தீவிரவாதிகள் போன்று வேடமணிந்த வீரா்கள் புதன்கிழமை 6 போ், வியாழக்கிழமை 3 போ் என மொத்தம் 9 பேரை போலீஸாா் பிடித்தனா்.