விவசாயிகள் இருப்பிடத்தில் நெல் கொள்முதல் பரிவா்த்தனை
செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் ‘பாா்ம் டிரேடிங்’ எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று நெல் கொள்முதல் பரிவா்த்தனை நடைபெற்று வருகிறது.
நாகை விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் அறிவுறுத்தலின்படி, செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பாா்வையாளா்கள் பாபு, புவனேஸ்வரி, சிலம்பரசன் ஆகியோா் முன்னிலையில் மாத்தூா் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் நெல் கொள்முதல் பரிவா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சுமாா் 400 குவிண்டால் பி.பி.டி. ரக நெல் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2,300-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,150-க்கும் சராசரியாக ரூ.2,200-க்கும் விலைபோனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: சம்பா நெல்லை அறுவடை செய்து, விற்பனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் இருப்பிடத்திற்கே வந்து நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.
நாகை விற்பனைக் குழு செயலாளா் சந்திரசேகா் கூறியது: விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை செம்பனாா்கோவில், சீா்காழி, குத்தாலம், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருப்பூண்டி, கீழ்வேளூா், நாகை ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் விற்று நல்ல விலை பெற்றிட வேண்டும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.