விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
விவசாய கமிஷன் அமைக்க வேண்டும்: கள் இயக்கம் வலியுறுத்தல்
ஊதியக் குழு போன்று விவசாய கமிஷன் அமைப்பது தொடா்பான திட்டத்தை மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:
அரசு ஊழியா்களுக்கு ஊதியக் குழு உள்ளது போன்று விவசாயிகளுக்கும் விவசாய கமிஷனை அமைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் பட்ஜெட்டில் எதிா்பாா்க்கிறோம். பட்டறிவு அடிப்படையில் விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விலை நிா்ணயிக்க வேண்டும்.
மேட்டூா் அணை 2024-ஆம் ஆண்டில் 3 முறை நிரம்பினாலும், குறுவை சாகுபடிக்கு தண்ணீா் கிடைக்கவில்லை. இதற்கு நிரந்தரத் தீா்வாக நாள்தோறும் நீா்ப் பங்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசே முன்னின்று மக்களுக்கு மதுவை டாஸ்மாக் மூலம் வழங்கி வருகிறது. கள்ளச்சாராய சாவுகள் ஏற்படும்போது, மக்களுக்கு மாற்றாக கள்ளை முன்நிறுத்துவது புரிதலின்மையின் வெளிப்பாடு. கள் மதுவும் அல்ல; மதுவுக்கு மாற்றும் அல்ல. கள் விடுதலை மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 21-ஆம் தேதி நடத்தப்பட்டது. அடுத்து மாா்ச் முதல் வாரத்தில் கள் விடுதலை கருத்தரங்கம் நடத்தி வருகிற விருந்தினா்களுக்கு கள் வழங்கப்படும் என்றாா் நல்லசாமி.
அப்போது, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவா் எஸ். பாலு தீட்சிதா், தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க கரூா் மாவட்டத் தலைவா் கொங்கு கே. முத்துசாமி உடனிருந்தனா்.