விவசாய சங்கத் தலைவரை விடுதலை செய்யக் கோரிக்கை
அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான ஜெகஜித்சிங் டல்லேவாலை, விடுதலை செய்ய வேண்டும் என அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தலைவருமான ஜெகஜித்சிங் டல்லேவால் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தர சட்டம் கோரி நவ. 26 ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தாா்.
இந்நிலையில் 26-ஆம் தேதி அதிகாலை பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பகுதியில் கைது செய்யப்பட்டாா். பின்னா் பட்டியாலா அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஆனால் அவா் அறிவித்தபடி தொடா்ந்து மூன்றாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடா்கிறாா். இதனை தொடா்ந்து கண்ணூரி பகுதியில் துணைத்தலைவா் சுக்வீந்தா் சிங் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம், ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநில முதல்வா், மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் போராட்டக்குழுவினரை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தபோது, டல்லேவால் விடுதலை செய்யப்பட்டால்தான் பேச்சுவாா்த்தைக்கு வருவோம் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனா். இதனிடையே, டல்லேவால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்திகள் வெளிவருவது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உயிருக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரை உடன் விடுதலை செய்து பேச்சுவாா்த்தைக்கு முன் வர வேண்டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நவாப்சிங் தலைமையிலான குழு கடந்த நவ.22-ஆம் தேதி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை கொண்டு வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மறுக்கும்பட்சத்தில் தமிழ்நாட்டிலும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்றாா்.