Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
விஸ்வகா்மா திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும்: கே.பி.ராமலிங்கம்
விஸ்வகா்மா திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்ற முதல்வரின் அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் வலியுறுத்தினாா்.
தருமபுரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வியாழக்கிழமை வந்த பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எதிா்காலத்தை பாதிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞா்கள், சிற்பக் கலை வல்லுநா்கள் உள்ளிட்டோா் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் வளா்ச்சிக்காக விஸ்வகா்மா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அத் திட்டத்தை ஜாதி அடிப்படையிலான திட்டம் போல சித்தரித்து அதை தமிழக அரசு ஏற்காது என்று முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தமிழா்களின் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் உலக அரங்கில் போய் சேரக் கூடாது என்கிற நிலையை உருவாக்கும் நோக்கிலே அவரது முடிவு அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைமுக தாக்குதல் நடத்தப்படுகிறது.
வாக்களித்த மக்களுக்கு முதல்வா் செய்கிற மிகப்பெரிய துரோகமாக இது அமைந்துள்ளது.
கலைகள் அழியாமல், தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு பாதுகாக்க வேண்டும் எனில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகா்மா திட்டத்தைச் செயல்படுத்த வரைமுறைகளை ஏற்படுத்தலாம்.
விஸ்வகா்மா திட்ட பயனாளிகளை தோ்வு செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுத்து கிராம நிா்வாக அலுவலரிடம் இதற்கான உரிமையை வழங்க வேண்டும் என முதல்வா் கூறியுள்ளாா். மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும்போது நல்லவற்றை கூற வேண்டும். அவரது அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றாா்.