சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி எ...
'வெளியூரில் இருக்கிறார்!' - மகள்களோடு சேர்ந்து கணவரை கொன்று புதைத்து, 50 நாள்களாக நாடகமாடிய மனைவி!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது: 53). பழனிவேலுக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். இதில், அவர்களது மகள் தமிழ்ச்செல்வி என்பவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தந்தை பழனிவேல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பழனிவேலு பல ஆண்டுகளாகவே உடலில் கலழை கட்டி நோய் இருந்து அதற்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மேலும், வயதானதால் பழனிவேலுக்கு நோய் அதிகமாகவே பழனிவேலு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பழனிவேலு இன்னும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே சில நாட்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால், கணவரை முறையாக பராமரிக்க முடியாமலும், மற்றொரு பக்கம் பழனிவேலு வாங்கிய கடன்களை அடைக்க முடியாமலும் அவரது மனைவியும், மகள்களும் அல்லல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவரது மனைவி மகாலட்சுமி, பழனிவேலுவை மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா உள்ளிட்டோர் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்து, தங்கள் வீட்டின் முன்பாக கடந்த 50 நாட்களுக்கு முன் புதைத்துள்ளனர். யாருக்கும் தெரியாததால் சந்தேகம் வராதபடி அனைவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி அன்று ஊர் மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், 'எங்கே உங்கள் அப்பா?' என்று பழனிவேலு மகள்களிடம் கேட்டபோது, 'அவரை பராமரிக்க முடியாததால் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளோம். கோவையில் சிகிச்சையில் இருக்கிறார்' என்றும் கூறி மழுப்பி வந்துள்ளனர்.

இப்படி, ஒரு பக்கம் ஊர் மக்களுக்கு சந்தேகம் வரவே யாரும் இதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மகாலட்சுமியின் மூத்த மகள் தமிழ்ச்செல்வி, 'அப்பா உடல் நலம் சரியில்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரை நாங்களே வீட்டின் முன்பாக அடக்கம் செய்து விட்டோம்' என்று கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த பழனிவேலுவின் சகோதரி, 'திடீரென நீங்களாக எப்படி எல்லாவற்றையும் செய்ய முடியும்?. நீங்கள் தான் பழனிவேலுவை ஏதோ செய்து விட்டீர்கள்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, மகாலட்சுமி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால், சந்தேகமடைந்த பழனிவேலுவின் சகோதரி கஸ்தூரி, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மகாலட்சுமி மற்றும் அவரது மகள்களான தமிழ்ச்செல்வி, சாரதா ஆகிய மூவரையும் கைது செய்த நமண சமுத்திரம் காவல்நிலைய போலீஸார், அவர்களது வீட்டின் முன்பாக புதைக்கப்பட்டிருந்த பழனிவேலு சடலத்தை தோண்டி எடுத்தனர்.

மேலும், மூன்று பேரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அங்கு வைத்து பழனிவேலு உடலை உடற்கூராய்வு செய்தனர். கணவரை மனைவியே தனது மகள்கள் இருவரோடு சேர்ந்து கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



















