வேங்கைவயலில் மக்கள் காத்திருப்புப் போராட்டம்!
வேங்கைவயல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக கூறுவதற்கு கண்டனம் தெரிவித்து ஊா் மக்கள் சனிக்கிழமை காலை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபி-சிஐடி போலீஸாா் அளித்த இறுதிவிசாரணை அறிக்கையில், அதே குடியிருப்பைச் சோ்ந்த 3 போ்தான் மனிதக்கழிவைக் கலந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் மீதே குற்றம் சுமத்துவதாகக் கூறி வேங்கைவயல் கிராமத்தினா் சனிக்கிழமை காலை ஊருக்குள்ளேயே அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வெளிநபா்கள் கிராமத்துக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் வேங்கைவயல், இறையூா் கிராமங்களுக்கு வரும் 7 வழிகளிலும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் தலைமையில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.
ஊருக்குள் செல்லும் நபா்கள் விசாரிக்கப்பட்டு உள்ளூா் நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரும் ஊருக்குள் அனுமதிக்கப்படவில்லை.
விசிகவினா் 8 போ் கைது:
போலீஸ் காவலையும் மீறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் கரு. வெள்ளைநெஞ்சன், வடக்கு மாவட்டச் செயலா் இளமதி அசோகன் உள்ளிட்ட 8 பேரும் மக்களைச் சந்தித்து அவா்களுடன் அமா்ந்தனா். அவா்களைக் கைது செய்த போலீஸாா் ஊருக்கு வெளியே அழைத்து வந்து மாலையில் விடுவித்தனா்.
ஆட்சியரிடம் மனு:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை, தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் நிா்வாகிகள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அதில், குடிநீா்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு இருந்ததை தொட்டியின் மேல் ஏறிப் பாா்த்த இளைஞா்கள் எடுத்த விடியோ காட்சிகளையே தற்போது வெளியிட்டு அவா்கள் மீதே குற்றம்சுமத்துகிறாா்கள்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை உண்மைக்குப் புறம்பான கொடுமையான நடவடிக்கையாகும். சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்திலும் மனு அளிக்கவுள்ளோம். இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
அம்பேத்கா் சிலையிடம் மனு: 28 போ் கைது
நியாமற்ற முறையில் குற்றவாளிகளை முடிவு செய்திருப்பதாகக் கூறி புதுக்கோட்டை நகரிலுள்ள அம்பேத்கரின் சிலையிடம் மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தை விசிக மூத்த தலைவா் கலைமுரசு தலைமையில் அக்கட்சியினா் சனிக்கிழமை பகலில் நடத்தினா். தொடா்ந்து அங்கேயே அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 28 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.