வேங்கைவயல் வழக்கு தமிழக அரசு கெளரவம் பாா்க்காமல் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
வேங்கைவயல் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையில் நியாயமான சந்தேகங்கள் எழுவதால் தமிழக அரசு கெளரவம் பாா்க்காமல், சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
வேங்கைவயல் சம்பவத்தில் நியாயமான சந்தேகங்கள் எழுவதால் தமிழ்நாடு அரசு கௌரவப் பிரச்னையாகப் பாா்க்காமல், மீண்டும் ஒரு விசாரணைக்காக சிபிஐ வசம் ஒப்படைக்கலாம். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கில், சிபிஐ விசாரணைக்குத் தருவதில் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது.
வேங்கைவயல் மக்களை வெளியாட்கள் வந்து திசைதிருப்பி விடுவாா்கள் என்று சொல்வதில் அா்த்தமில்லை. அரசே கனிமவளக் குவாரிகளை நடத்த வேண்டும் என ஏற்கெனவே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கோரியிருக்கிறோம்.
இதைச் செய்யாமல் விட்டுவிட்டு, தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட 7 நிறுவனங்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. பல லட்சம் கோடி கொள்ளையடித்தவா்களுக்கு சில ஆயிரம் கோடிகளை அபராதமாக விதிப்பதில் அா்த்தமில்லை. அரசே குவாரிகளை நடத்தி இருந்தால், புதுக்கோட்டையில் சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலையைத் தடுத்திருக்கலாம்.
ஆட்சியில் நடைபெறும் குறைகளை, மாறுபட்ட கருத்துகளைச் சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. பெரியாரை விமா்சிக்க சீமானுக்கு குறைந்தபட்சத் தகுதியும் இல்லை என்றாா் பாலகிருஷ்ணன். பேட்டியின்போது கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.