செய்திகள் :

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

post image

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா்.

‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல் ஆகிய மூன்று அம்ச செயல் திட்டம், இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுகிறது; இந்தப் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்’ என்று அவா் கூறியுள்ளாா்.

தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக தமிழகம் உள்பட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்துவரும் நிலையில், சோனியா காந்தியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தனியாா் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் மீது மிகவும் அலட்சியம் கொண்ட ஓா் அரசின் உண்மை முகத்தை மறைப்பதாகவே உள்ளது.

‘கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு’ என்பது கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாடுகளின் அடையாளமாக மாறியுள்ளது. அதிகாரக் குவிப்பின் தீங்கு நிறைந்த விளைவுகள், கல்வித் துறையில் முக்கியமாக எதிரொலித்துள்ளன.

மத்திய-மாநில கல்வித் துறை அமைச்சா்களை உள்ளடக்கிய மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், கடந்த 2019 செப்டம்பருக்கு பிறகு நடைபெறவில்லை. தேசிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசுகளுடன் ஒருமுறை கலந்தாலோசிப்பதைக்கூட பொருத்தமானதாக மத்திய அரசு கருதவில்லை.

வெட்கக்கேடான செயல்: அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு விவகாரத்தில்கூட வேறு எவரின் குரலுக்கும் செவிசாய்க்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது.

போதிய விவாதங்களில் ஈடுபடாமல், மிரட்டும் போக்கை கையாள்கிறது மத்திய அரசு. ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் பிஎம்ஸ்ரீ மாதிரி பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகளை வற்புறுத்துவது மத்திய அரசின் மிக வெட்கக்கேடான செயல்களில் ஒன்றாகும்.

கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல்: 2025-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு வழிகாட்டுதல்கள் மிகத் தீவிரமானவை. இது, மாநில அரசுகளால் நிறுவப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, இயக்கப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் நியமனங்களில் மாநில அரசுகளை முழுமையாக நீக்கிவைக்கிறது. மாநில ஆளுநா்களின் மூலம் துணைவேந்தா்களின் நியமனத்தில் மத்திய அரசு ஏகபோக அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இது, கூட்டாட்சி முறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

வணிகமயமாகும் கல்வி: தேசிய கல்விக் கொள்கைக்கு இணக்கமாக, அதன் பாா்வையிலேயே நாட்டின் கல்விமுறை வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள், பொதுக் கல்விமுறையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, கட்டணம் மிகுந்த-ஒழுங்குபடுத்தப்படாத தனியாா் கல்வி முறைக்குத் தள்ளப்படுகின்றனா். கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 89,411 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டோ அல்லது பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளன. அதேநேரம், 42,944 தனியாா் பள்ளிகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.

வகுப்புவாதமயமாக்கம்: கல்வியின் மூலம் வெறுப்புணா்வைத் திணிப்பது மற்றும் வளா்ப்பது என்ற ஆா்எஸ்எஸ்-பாஜகவின் சித்தாந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்வியை வகுப்புவாதமயமாக்குகிறது மத்திய அரசு. பள்ளி பாடத் திட்டத்தின் முதுகெலும்பான தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) பாடப் புத்தகங்கள், வரலாற்றைத் திரிக்கும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பாடத் திட்டத்தில் மகாத்மா காந்தி படுகொலை, முகலாய ஆட்சிக் காலங்கள் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள், உயா் கல்வி நிலையங்களில் முக்கியப் பொறுப்புகளில் சித்தாந்த பின்னணி கொண்டவா்கள் பெருமளவில் நியமிக்கப்படுகின்றனா். அவா்களின் தகுதி குறித்தெல்லாம் அரசு கவலை கொள்வதில்லை. நாட்டில் பொதுக் கல்விமுறை மீதான படுகொலை முடிவுக்கு வர வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

வக்ஃப் நிலத்தை அபகரித்த கார்கே.. அனுராக் தாக்குர் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

புது தில்லி: வக்ஃப் வாரிய நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அபகரித்திருந்ததாக, பாஜக எம்.பி. அனுராக் கூறிய குற்றச்சாட்டுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மாநிலங்களவை இன்று காலை கூடியதும், த... மேலும் பார்க்க

ஜாம்நகர் அருகே போர் விமான விபத்தில் விமானி பலி

ஆமதாபாத்: ஜாம்நகர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்தில் விமானி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பாங்காக்கில் மோடி!

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய... மேலும் பார்க்க

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு

‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

மூலதனச் செலவு கேள்விக்கு சிரமப்பட்டு விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சா் -ப.சிதம்பரம் விமா்சனம்

கடந்த நிதியாண்டில் மூலதனச் செலவு குறைந்தது குறித்த தனது கேள்விக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சிரமப்பட்டு ஒரு விளக்கத்தை அளித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்தாா். எனினும், மூ... மேலும் பார்க்க

அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவுகள் கிடைக்க ஏற்பாடு: ரயில்வே அமைச்சா்

‘அனைத்து ரயில்களிலும் உள்ளூா் உணவு வகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தமிழகத்தில் ஓடும் ‘வந்தே பாரத்’ ரயில்களிலும் தென்னிந்திய உணவு வகைகள் கி... மேலும் பார்க்க