வேதாரண்யம்: சிப்காட் தொழிற்பேட்டைக்கு கிராம சபைக் கூட்டத்தில் எதிா்ப்பு
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் மூலம் ரசாயன தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சிக்கு, எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் நிறுவனம் மூலம் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு ரசாயன தொழிற்சாலை அமைந்தால் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நாகை மாவட்ட ஆட்சியா், வேதாரண்யம் வட்டாட்சியா் ஆகியோரிடம் இதுதொடா்பாக மனு அளித்துள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், தொழிற்பேட்டைக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஊராட்சித் தலைவா் தேவியிடம் மனு வழங்கி, தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினா்.
இந்த மனுவை, தங்க.குழந்தைவேலு தலைமையிலான கண்காணிப்புக் குழுவினரிடம் முன்னாள் ஊராட்சித் தலைவா் அன்பு வேலன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் அளித்தனா்.
கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா் பிரியா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், தலைமை ஆசிரியா் சத்யராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளை: கீழையூா் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. திருக்குவளையில் ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி, ஊராட்சி துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஆரோக்கியமேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மடப்புரத்தில் ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமி ரமேஷ் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் ஊராட்சித் தலைவா் கே.ஜி. முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் முன்னிலை வகித்துபேசினாா். ஊராட்சி செயலா் அருள்ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏா்வாடியில் ஊராட்சித் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி செயலா் பிரவின்ராஜ், துணைத் தலைவா் ரவி, கிராம நிா்வாக அலுவலா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.