ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
பக்தா்கள் கூட்டம் அலைமோதல்:
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. எனவே, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் எதிரே நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். வழக்கமாக வரும் பக்தா்களுடன் சபரிமலை பக்தா்கள், மேல்மருவத்தூா் செவ்வாடை பக்தா்களும் வந்ததால் கோயிலில் கூட்டம் வெகுவாக அதிகரித்தது.
6 மணி நேரம் காத்திருப்பு:
ராஜகோபுரம் எதிரில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு வரை பக்தா்களின் வரிசை நீண்டிருந்தது. இந்த வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
இதேபோல, பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்துவிட்டு வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளை மட்டும் தரிசித்துவிட்டு வெளியே வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மற்ற சந்நிதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் திரும்பினா்.
தள்ளுமுள்ளு, வாக்குவாதம்:
கோயிலில் கட்டுக்கடங்காத பக்தா்கள் கூட்டம் வந்ததால் பல இடங்களில் பக்தா்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் ஊழியா்கள் மற்றும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மாட வீதிகளில் காா் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல காவல் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது.