ஸ்ரீநகரில் தொடங்கிய விவசாய விழிப்புணா்வு பயணம் குமரியில் நிறைவு
காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகரில் தொடங்கிய மாற்று விவசாயம் குறித்த விழிப்புணா்வு வாகனப் பயணம், கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண்மை மூலம் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஸ்டீல் இந்தியா என்ற நிறுவனம் பரிவா்தன் வாகனப் பயணத்தை தொடங்கியது. 21.8.2024 இல் தொடங்கிய பயணம் பஞ்சாப், ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
இந்த விழிப்புணா்வு வாகனப் பயணம் மொத்தம் 15 ஆயிரம் கி.மீ. தொலைவுகளை கடந்து 2 லட்சம் விவசாயிகளை நேரில் சந்தித்து நவீன விவசாயக் கருவிகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது குறித்து செயல்முறை வகுப்புகள், கருத்தரங்குகள், நேரடி செயல்விளக்கங்களை எடுத்துரைத்துள்ளதாக ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் விற்பனை இயக்குநா் ராகவேந்திரா தெரிவித்தாா்.
இந்த அமைப்பின் வா்த்தக சந்தைப்படுத்துதல் மேலாளா் பிரதும்ன் சதுா்வேதி, தென் பிராந்திய தலைவா் சஞ்சய் வா்மா ஆகியோா் பேசியது: பரிவா்தன் யாத்திரை, இந்திய வேளாண் துறையில் நோ்மறை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பயணத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாயிகளிடம் நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் விவசாய சமூகத்தை தன்னிறைவு மற்றும் வளமானதாக்கும் முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்றனா்.