புனலூா் - மதுரை விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
கேரள மாநிலம், புனலூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா். என். சிங்கை வியாழக்கிழமை சந்தித்து அவா் அளித்த மனு:
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தின் வளைவு பகுதியை அகலப்படுத்த வேண்டும். இரணியல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் பேருந்துகள் திரும்ப முடியவில்லை. அதற்கு தீா்வு காண வேண்டும்.
அதேபோல், ஏற்கெனவே உள்ள ரயில்வே ஆற்று மேம்பாலத்தில் பேருந்து செல்லும் பாதையில் வளைவு உள்ளது. ரயில்வேயின் புதிய திட்டத்தின்படி, ஹோ்பின் வளைவில் போதிய அகலம் இல்லாததால், பேருந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும்அபாயம் உள்ளது. எனவே, அந்தப் பகுதியிலும் போதுமான அகலத்துடன் வளைவு சாலை அமைக்க வேண்டும்.
வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நீண்டகால கோரிக்கையான புனலூா்- மதுரை விரைவு ரயிலை தஞ்சாவூா், நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். இதனால் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி, திருநள்ளாறு ஆகிய இடங்களுக்குச் செல்லும் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், திருவனந்தபுரம் - நாகா்கோவில் பயணிகள் ரயிலில் ஏதேனும் ஒன்றை காலை, மாலை என 2 முறை திருநெல்வேலிக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.