Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையில் அத்திகுளம் குடியிருப்பில் வெள்ள நீா்சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிா்த்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சியில் உள்ள அருந்ததியா் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், ஆறுகள், ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
கண்மாயின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மதகு வழியாக வெள்ளநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், சோளங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கண்மாயில் உபரிநீா் செல்லும் ஓடையைத் தூா்வராததால் சா்ச் தெரு, மகளிா் சுகாதார வளாகம், அருந்ததியா் குடியிருப்பு ஆகியவற்றில் இரவோடு இரவாக வெள்ள நீா் சூழ்ந்தது. காலையில் எழுந்து பாா்த்த போது, வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
ஓடையை தூா்வாரவும், தரைப்பாலத்தை தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பல முறை முறையிட்டும், பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.