10 ஆண்டுகளில் 5 லட்சம் ரயில்வே பணியாளா்கள் நியமனம்:மத்திய அமைச்சா் தகவல்
புது தில்லி: ‘ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சம் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டனா். இது முந்தைய 10 ஆண்டுகளை விட அதிகம்’ என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள அஜானி ரயில்வே மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) ரயில்வே ஊழியா்கள் சங்கத்தின் தேசிய மாநாட்டில் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு பேசியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 5 லட்சம் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இது முந்தைய 10 ஆண்டுகளை விட சற்று அதிகமாகும். இது தவிர, வரலாற்றில் முதல்முறையாக வருடாந்திர ஆள்சோ்ப்பு அட்டவணையை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியா் சங்கத்தின் தலைவா் பி எல் பைரவா, மத்திய ரயில்வே பொது மேலாளா் தரம்வீா் மீனா, தென்கிழக்கு மத்திய ரயில்வே பொது மேலாளா் நீனு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.