17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் 17 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், கடலூா் மாவட்டம் மங்களூா், பண்ருட்டி, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, குமரி மாவட்டம் தோவாளை, புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டாா்கோவில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், சேதுபாவாசத்திரம், தேனி மாவட்டம் சின்னமனூா், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருப்பூா் மாவட்டம் பொங்கலூா், விழுப்புரம் மாவட்டம் கானை, மேல்மலையனூா், முகையூா், வானூா் ஆகிய இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சி.வி.கணேசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் பா.பொன்னையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.