185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!
குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், அரசு சார்பில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் உள்ள ஆத்மியா கல்லூரியில், இன்று (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசினால் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் ஹர்ஷ் சாங்வி கூறியதாவது:
“நாம் இன்று 185 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளோம். இவர்களில், பெரும்பாலானோரது குடும்பங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களுக்கு இடையில் வாழ்ந்து வந்தனர். அவர்களது, மகள்கள் பள்ளிக்கூடங்கள் செல்வதற்குக் கூட அச்சப்பட்டதாக, அவர்கள் என்னிடம் கூறினர்” என்று அவர் பேசியுள்ளார்.
கடந்த, 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவினுள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு, குடியுரிமைப் பெற முடியும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தவறான விடியோக்கள்: 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு