பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!
1985 விமான குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்பட்ட நபரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!
கனடா நாட்டில் 1985 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் தொடர்புடைய சந்தேக குற்றவாளியைக் கொலை செய்த 24 வயது கனடா நாட்டு இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தொழிலதிபரான ரிப்பூதமன் சிங் மாலிக் என்பவர் அவரது காரில் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர், 2 வாரங்கள் கழித்து பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டேன்னர் ஃபாக்ஸ் மற்றும் அவரது கூட்டாளியான ஜோஸ் லோபஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2024 அக்டோபரில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றம் ரிப்பூதமன் சிங் மாலிக்கை கொலை செய்ததற்காக நேற்று (ஜன.28) டேன்னர் ஃபாக்ஸிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் ஜாமின் பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளியான ஜோஸ் லோபஸ்ஸிற்கு வருகின்ற ஜன.31 தண்டனையின் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டு 80 ஆண்டுகள்! அதிபர் டிரம்பிற்கு அழைப்பு!
முன்னதாக, கடந்த 1985 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து இந்தியா நோக்கிய பயணத்தில் ஏர் இந்தியா விமானம் 31,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 329 பேர் கொல்லப்பட்டனர். பலியான மக்களில் பெரும்பாலானோர் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து இந்தியா நோக்கி பயணம் செய்யவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு விமான நிலையத்தில் வெடித்து சிதறியது. அப்போது, அங்கிருந்த பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் கொலை செய்யப்பட்ட ரிப்பூதமன் சிங் மாலிக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். எனவே, தற்போது கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் இருவரும் மாலிக்கை கொலை செய்வதற்காக வேறுவொரு நபரினால் பணியமர்த்தப்ப்பட்டதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.