Modi ட்ராக்...என்ன சொல்கிறார் EPS? DMDK வைத்து DMK Vs BJP ரூட்! | Elangovan Expl...
2018 குன்றத்தூர் குழந்தைகள் கொலை: தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவுக்காக, சென்னை அருகே குன்றத்தூரில் பாலில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில், அவருக்கான தண்டனை விவரங்கள் வெளியாகவிருக்கிறது.
குழந்தைகள் கொலை வழக்கில், சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியிட்டு பிரபலமாக இருந்த தாய் அபிராமி, பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழகத்தை உலுக்கிய வழக்கு!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் (7) என்ற மகனும், காருனிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று, வங்கியில் வேலைப்பளு காரணத்தால், வங்கியிலேயே வெள்ளிக்கிழமை இரவு விஜய் தங்கினார். சனிக்கிழமை அதிகாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்ற விஜய், படுக்கை அறையில் குழந்தைகள் அஜய்யும், காருனிகாவும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், தனது மனைவி அபிராமியை தேடினார். ஆனால் அங்கு அபிராமி இல்லாதது அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், பிரியாணி கடை நடத்தி வருபவருடன் ஏற்பட்ட நட்பால், தாய் அபிராமியே குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவருடன் தப்பியோடியிருந்தார். பிறகு தலைமறைவாக இருந்த அபிராமி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.