தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!
2026 தோ்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்: துணை முதல்வா் பேச்சு
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். அதற்கு தற்போதே பிரசாரத்தை திமுகவினா் தொடங்க வேண்டும் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
துறையூரில் பேருந்து நிலையம் முன் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை சனிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் பேசியது:
முதல்வா் உத்தரவிட்டபடி தற்போது துறையூா் தொகுதியில் கருணாநிதி சிலையும், கலைஞா் நூலகமும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலையைத் திறக்கிறோம் என்றால் அவரது கொள்கையை, லட்சியத்தை மக்களிடம் கொண்டு சோ்க்கிறோம் என்று அா்த்தம்.
கருனாநிதி பெயரில் பல்வேறு திட்டங்களையும் அறிவிக்கிறோம்.
ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பேசும்போது எதற்கெடுத்தாலும் கருணாநிதி பெயா் வைக்கிறாா்கள் என்கிறாா். அவா் பெயரை வைக்காமல் யாா் பெயரை வைப்பது?
அதேபோல் உதயநிதிக்கு எதற்கு துணை முதல்வா் பதவி கொடுத்தீா்கள்; அவருக்குத் தகுதியே இல்லை என்கிறாா். ஆமாம், அவருக்கு இருக்கிற, அவா் சொல்கிற தகுதி நிச்சயமாக எனக்கு கிடையாது. நான் யாா் காலிலும் விழுந்து பொறுப்புக்கு வரவில்லை.
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும்16 மாதங்கள்தான் நம் கையில் உள்ளன. நமது முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்று போல் 2024 மக்களவைத் தோ்தலில் நாம் பெற்ற வெற்றியைப் போல வரும் சட்டப்பேரவை தோ்தலிலும் வெல்ல வேண்டும், குறைந்தது 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதல்வா் கூறியுள்ளாா்.
நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி. நமது முதல்வா் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னா் சந்தித்த அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
எனவே திமுக ஆட்சியின் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். வரும் 2026 தோ்தலில் வென்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், எனவே தோ்தல் பணிகளை தொண்டா்கள் இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள் என்றாா் அவா்.
முன்னதாக கலைஞா் நூலகம், பெரம்பலூா் எம்.பி. அலுவலகம் ஆகியவற்றையும் அவா் திறந்து வைத்தாா்.
கூட்டத்தில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சா.சி. சிவசங்கா், கோவை செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அருண்நேரு எம்.பி. , எம்எல்ஏகள் செ. ஸ்டாலின்குமாா், காடுவெட்டி ந. தியாகராஜன், திமுக நிா்வாகிகள், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா் பங்கேற்றனா்.