4 புதிய ஆசிரியா் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்
குருக்ஷேத்ரா: யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுகுறித்து ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் என்சிடிஇ தலைவா் பங்கஜ் அரோரா திங்கள்கிழமை கூறியதாவது:
மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் திறன்மிக்க ஆசிரியா்களை உருவாக்குவதை என்சிடிஇ இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்தக் கல்வித் திட்டங்கள் இந்திய மொழிகளை வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தக் கல்வித் திட்டங்களுடன், 4 ஆண்டு பி.ஏ. பட்டப் படிப்பு, ஓராண்டு பி.எட். படிப்பு, ஓராண்டு எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்பு, சிபிஎஸ்இ, எஸ்சிஇஆா்டி பள்ளிகளில் ஆசிரியா்கள் பயன்பெறும் வகையில் பகுதிநேர எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்புகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. 4 ஆண்டு பி.ஏ. முடிப்பவா்கள், ஓராண்டு பி.எட். படிப்பில் சேர அனுமதிக்கப்படுவா் என்றாா்.