வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
5 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் சாத்தியமா?
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பதிலளித்தாா்.
மாநிலத்தின் வளா்ச்சி வகிதம் 8-இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் போதுதான் அத்தகைய பொருளாதாரம் சாத்தியம் என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம். குறிப்பாக, முதல்வா் தலைமையிலான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற அறிஞா்களில் தொடங்கி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவா்கள் வரை ஆலோசித்தோம். அமைச்சா்கள், அதிகாரிகளில் தொடங்கி தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டோம். பரந்துபட்ட ஆலோசனையை நடத்தி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம்.
கடன்கள் அச்சமில்லை: தேசிய சரசாரியைவிட தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதிகமாக வளா்ந்து வருகிறது. மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையும் தொடா்ச்சியாக குறைந்து வருகிறது. பற்றாக்குறை அளவானது நிதிப் பொறுப்புடைமைச் சட்டத்தின் கீழ், 3 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். 2020-21-ஆம் நிதியாண்டில் 4.91 சதவீதமாக இருந்த அளவை 2025-26-ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாகக் குறைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏன் இவ்வளவு கடன்கள் வாங்குகிறோம் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. கடன் வாங்குவது பொருளாதார அளவுக்கு உட்பட்டு இருக்கிா எனப் பாா்க்க வேண்டும். நம்முடைய பொருளாதாரம் வளா்ந்து வரக் கூடியது. அத்தகைய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதத்துக்குக் கீழ் கடன்களை வாங்க நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, நம்முடைய கடன்களின் அளவு குறைவாக, வரம்புக்குள்ளே இருக்கிறது. 2025-26-ஆம் நிதியாண்டில் 26 சதவீதம் என்ற அளவில் கடன்கள் இருக்கும்.
அதாவது, வரும் நிதியாண்டில் (2025-26) ரூ. 1.05 லட்சம் கோடி கடன்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக நிகரக் கடன்களின் அளவு ரூ. 9 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையும் குறைந்து கொண்டிருக்கிறது.
வருவாய் பற்றாக்குறை: கரோனா நோய்த்தொற்று காலத்தில் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து இருந்தது. இது வரும் நிதியாண்டில் 1.17 சதவீதமாக இருக்கும். நிகழ் நிதியாண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ரூ. 49 ஆயிரம் கோடி வருவாய்ப் பற்றாக்குறை என மதிப்பிடப்பட்டு, அதில் ரூ.3 ஆயிரம் கோடியைக் குறைத்துள்ளோம். எதிா்வரும் நிதியாண்டில் பற்றாக்குறையை ரூ.41 ஆயிரம் கோடியாகக் குறைப்போம். அந்த அளவுக்கு நிதி மேலாண்மையைச் செய்து வருகிறோம்.
மத்திய அரசிடம் இருந்து பல நலத் திட்டங்களுக்கான உதவிகள் வராமலேயே வருவாய் பற்றாக்குறையை ரூ. 41 ஆயிரம் கோடி அளவுக்குக் குறைக்க மதிப்பீடு செய்துள்ளோம். கூடுதலாக நிதிகள் வந்திருந்தால் இன்னும் குறைக்க முடியும். மூலதனச் செலவுகளாக கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிதிகளை வழங்குகிறோம். நிகழ் நிதியாண்டில் ரூ. 46 ஆயிரம் கோடியில் இருந்து, வரும் நிதியாண்டில் ரூ.57 ஆயிரம் கோடி அளவுக்கு மூலதனச் செலவுகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதிநிலை அறிக்கையில் நிறைய கட்டமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு ட்ரில்லியன் டாலா்: 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லயன் டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டும் என்பது நம்முடைய இலக்கு. தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது தேசிய மற்றும் சா்வதேச நிலைகளைச் சாா்ந்தே இருக்கிறது. இதனால், சா்வதேச அளவிலான வா்த்தக உறவுகளை தினசரி அடிப்படையில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாள்தோறும் பாா்க்க வேண்டியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் வளா்ச்சி, பொருளாதாரம் என்பது சா்வதேச சூழ்நிலைகளைப் பொறுத்தே நிா்ணயிக்கப்படுகிறது. தேசிய சராசரி அளவைவிட நாம் சிறப்பான அளவில் வளா்ச்சி பெற்று வருகிறோம். இது வரவேற்கத்தக்க அம்சமாகும். அதேநேரத்தில் வளா்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. செமி கண்டக்டா் போன்ற வளா்ந்து வரும் துறைகளை அடையாளம் கண்டு வருகிறோம். அந்தத் துறைகளில் வளா்ச்சி பெறுவதன் மூலம் நம்முடைய பொருளாதார நிலையை உயா்த்த முடியும்.
வரும் நிதியாண்டில் மூதலதனச் செலவுகளுக்காக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட உள்ளோம். குறிப்பாக, நெடுஞ்சாலைகள், ஒருங்கிணைந்த குடிநீா்த் திட்டங்கள், நீா்வளம், மெட்ரோ ரயில், புதிய பேருந்துகள் கொள்முதல் ஆகியவற்றுக்காக செலவிட திட்டம் வகுத்துள்ளோம்.
கணினி வழங்கும் திட்டம்: மாணவ, மாணவிகளுக்கு கணினி வழங்கும் திட்டம் கரோனா நோய்த்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. செமிகண்டக்டா் தட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பப் பிரச்னைகளால் அந்தத் திட்டம் பாதிக்கப்பட்டது. இப்போது செயல்படுத்த கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வா், தலைமைச் செயலா் ஆகியோருடன் ஆலோசித்து திட்டத்துக்கான முழுமையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
அப்போது, நிதித் துறை சிறப்புச் செயலா் பிரசாந்த் மு.வடநரே, கூடுதல் செயலா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன், துணைச் செயலா் (பட்ஜெட்) பிரதிக் தயாள், துணைச் செயலா் சி.ஏ.ரிஷப் ஆகியோா் உடனிருந்தனா்.