Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?' - சீமான் கேள்வி!
சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி, அந்நாட்டு அரசு அதானி உள்ளிட்டோரைக் கைதுசெய்ய உத்தரவிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கும் பேரவமானமாகும்.
‘மோடியின் பினாமி’ என வர்ணிக்கிற அளவுக்கு கெளதம் அதானிக்கு நிழல்போல எல்லாவுமாக இருக்கிற பிரதமர் நரேந்திரமோடி, நாட்டையே உலுக்கியிருக்கும் இம்மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இப்போதுவரை வாய்திறக்காதிருப்பதேன்? நாட்டின் பெயரையும், புகழையும் சீர்குலைக்கும் வகையில் முறைகேடுசெய்து அமெரிக்க அரசால் கைதுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அதானியின் மீதும், அவரது குழுமத்தின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காதிருப்பது எதற்காக? இன்னும் அவரைக் காப்பாற்றவும், கரைசேர்க்கவும்தான் முயற்சிக்கிறதா பாஜக அரசு? இழிநிலை! மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்கு முறைவாசல் செய்திடும் பா.ஜ.க-வின் ஆட்சியதிகாரம் நாட்டைப் பிடித்த பெருங்கேடு!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மின்சார வாரியங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 2019 – 20-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமானது (SECI) அதானியின் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தமிட்டிருக்கிறது. அதன்படி, அதானி நிறுவனம் 8 ஜிகா வாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துக்கு வழங்கும்.
விலை அதிகமாக இருந்ததால் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்விநியோக நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்குவதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்குக்கு 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 2,000 கோடி ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதெனக் கூறி, அதானி குழுமத்தின் மாபெரும் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.
இந்த வழக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தொடுக்கப்பட்டு, கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்சார வாரியங்களுக்கு இலஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டுமொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.
டிசம்பர் 1, 2021 அன்று இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் 7 ஜிகா வாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆந்திர அரசு. இதற்காக, 1,750 கோடி ரூபாய் அம்மாநில அரசுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்துடன் தமிழக மின்சார வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்சார வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டியிறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
2012- 2016-ம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (TANGEDCO) அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், திமுகவின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI) அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.
திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்காவரை சென்று தமிழ்நாட்டின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வாய்திறக்காது கள்ளமௌனம் சாதிக்கிறார். எல்லாவற்றுக்கும் அறிக்கைப்போர் தொடுத்து, லாவணிக்கச்சேரி நடத்துகிற தி.மு.க, இவ்விவகாரத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என்பது புரியவில்லை. அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் இடவில்லை என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டாரே மின்சாரத்துறை அமைச்சர் தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தோடு தி.மு.க அரசு ஒப்பந்தம் இட்டதாக யாரும் குற்றஞ்சாட்டவில்லையே!
அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துதான், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து தமிழக மின்சார வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பதுதானே குற்றச்சாட்டு. அதுகுறித்து தி.மு.க அரசின் நிலைப்பாடென்ன? என்ன சொல்லப்போகிறார் தம்பி செந்தில் பாலாஜி? அதானி தமிழக மின்சார வாரியத்துக்கு லஞ்சம் கொடுக்கவில்லை; அப்பழுக்கற்ற அதானி மீது அமெரிக்க அரசு அநியாயமாகக் குற்றஞ்சுமத்துகிறதென்றா? யார் லஞ்சம் வாங்கியது? அதிகாரிகளா? அமைச்சரா? இல்லை! முதல்வரா? அதிகாரிகள்தானென்றால், அமைச்சருக்குத் தெரியாது அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துவிட முடியுமா?
அரசுப்போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த அடித்தட்டு மக்களிடமே லஞ்சம் வாங்கிக் கைகளையும், பைகளையும் நிரப்பிய வித்தகரான தம்பி செந்தில்பாலாஜி, அதானி குழுமத்தையா விட்டுவைப்பார்? ஐயா கருணாநிதி கூறிய, தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா எனும் முதுமொழி நினைவுக்கு வருகிறதில்லையா?ஏற்கனவே, 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடனில் தமிழக மின்சார வாரியம் சிக்கித் தவிக்கும் சூழலில், அச்சுமையை மக்களின் தலையில் மின்கட்டண உயர்வாக ஏற்றி வரும் தி.மு.க அரசு, இனியென்ன செய்யப் போகிறது? அதானி குழுமத்திடம் பல கோடிகளை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி ஏழைகளின் வயிற்றிலடிப்பதுதான் சமூக நீதி அரசா?
அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்றுவரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பதுதான் திராவிட மாடலா? கடந்த சூலை 10 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த கெளதம் அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னப் பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கெளதம் அதானியைச் சந்திப்பதும், கெளதம் அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான தம்பி உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? திமுக அரசுக்கும், கெளதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து தி.மு.க-வின் ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது தி.மு.க அரசு.
இத்தோடு, மோசடிப் பின்புலம் கொண்ட அதானி குழுமத்தை 42,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. அதானி மீது பாசத்தைப் பொழிவதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் பா.ஜ.க-வோடு, தி.மு.க ஏன் போட்டிபோடுகிறது? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா? இதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கான அதிகாரமா? வெட்கக்கேடு! பேரவலம்!ஆகவே, நாட்டின் மானத்தைக் கப்பலேற்றிய கெளதம் அதானி மீதும், அவரது குழுமத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, அவரைக் கைதுசெய்யவும், அவரது குழுமத்துடான அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்து, அக்குழுமத்தினை மொத்தமாகக் கறுப்புப்பட்டியலில் வைக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ள மறுக்கும் ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டுக்கே செய்திடும் பச்சைத்துரோகமாகும்.
இத்தோடு, பா.ஜ.க அரசை எதிர்ப்பதாக வெளிவேடமிட்டுக் கொண்டே, அவர்களோடு கொல்லைப்புற வழியாக உறவாடி, அதானிக்கு வாசல்திறந்துவிடும் தி.மு.க அரசின் நயவஞ்சகப்போக்கு தமிழர்களது நலனை அடகு வைத்திடும் கங்காணித்தனத்தின் உச்சம். மக்களாட்சிக்கு எதிரான இச்செயல்பாடுகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.