கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
ADMK : "பிரிந்தவர்கள் சேர விரும்பினால், ஒரு கடிதம்..." - ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன?
'ஏழிசை தென்றல்' என்.கே.டி. தியாகராஜ பாகவதரின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தியாகராஜ பாகவதர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “வரும் 2026 -ல் அற்புதமான வெற்றிக் கூட்டணியை கழகப் பொதுச் செயலாளர் அமைப்பார். ‘முதல்வருக்கு பிறந்தநாள், அவர் ஆட்சி எப்படி இருக்கிறது?’ என்று கேட்கிறீர்கள். அவர் நன்றாக இருக்கட்டும். அவர் ஆட்சியைப் பொறுத்து வரை வேதனைப்பட வைக்கும் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது.
சீமான் வீட்டு காவலரை கைது செய்வதையே நடவடிக்கையாக பார்க்கும் போது சர்வாதிகார நடவடிக்கையாக பார்க்க வைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.” என்றவரிடம், `நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று ஆதவ் அர்ஜூனா சொல்லி இருப்பதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... அதற்கு அவர், `தமிழகம் முழுவதும் பல கோடி தொண்டர்கள் உள்ள கட்சியாக, மிகப்பெரிய கட்சியாக எங்கள் கட்சி உள்ளது. இதோடு போட்டி போடும் அளவுக்கு எந்த கட்சியும் கிடையாது.
தி.மு.க-வும், பா.ஜ.க-வும் மும்மொழிக் கொள்கையில் நாடகமாடுகின்றனர் என்று கேட்கிறீர்கள். மும்மொழிக் கொள்கையில் யார் நாடகமாடுவார்கள் என்று தெரியாது. இரு மொழிக் கொள்கைதான் நமக்கு. அதற்குத்தான் அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும். மூன்றாவது மொழியை படிக்கலாம். ஆனால், திணிக்க கூடாது. இது கட்சியின் முடிவு.

அ.தி.மு.க-வை யாரும் பலவீனப்படுத்த முடியாது. கட்சியில இல்லாதவர்கள், வெளியே போனவர்கள், கட்சியை விட்டு வேறு கட்சியில் போட்டியிட்டவர்கள், அங்கு சேர்ந்தவர்கள் இரட்டை இலை எனக்கு வேண்டும், கட்சி எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள் என்றால், அதனை சுப்ரீம் கோர்ட், தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தொடர்பில்லாதவர்கள் கட்சியில் சேர வேண்டும் என்றால் கடிதம் எழுத கொடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் விருப்பப்பட்டால் சேர்க்கலாம். இதுதான் கட்சி நடைமுறை. ஆளுங்கட்சியை எதிர்த்து கட்சி நடத்துகிற ஒரே தலைவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி தான். தி.மு.க அறிவித்த நீட் தேர்வு ரத்து என்பதை நிறைவேற்றவில்லை.
சொல்வதற்கு நிறைய உள்ளது. அவர்கள் சொன்ன எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நான்கு வருடத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி விதித்துள்ளார். ரூ. 9 லட்சம் கோடி என்ன செய்தார் என்று தெரியவில்லை. இந்த ஆட்சி வேண்டுமா என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. தி.மு.க ஆட்சி போகப்போகிறது. அ.தி.மு.க ஆட்சி வரப்போகிறது” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
