மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
Ajithkumar: ``அஜித் சார் படத்துல நடந்த விஷயம் சிம்பு படத்துலயும் நடந்துச்சு" - இயக்குநர் V.Z.துரை
அஜித்தின் 'முகவரி' படத்துக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. கடந்த 2000ம் ஆண்டில் பிப்ரவரி 19-ம் தேதி இதே தினத்தில்தான் 'முகவரி' படம் வெளியானது.
அஜித், ரகுவரன், ஜோதிகா, கே.விஸ்வநாத், சித்தாரா என நடிப்பில் மிளிரும் நட்சத்திரப் பட்டாளம் படத்தில் ஜொலித்திருந்தார்கள். அதைப் போலவே, பாலகுமாரனின் வசனம், பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு, தேவாவின் இசை எனப் பல மேஜிக்குகள் இந்தப் படத்தில் உண்டு. இப்படம் 25வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அதன் இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன்.

''இப்போதுதான் படம் வெளியானதுபோல, சந்தோஷமா இருக்கு. 'முகவரி'யின் மணம், 25 வருஷம் அதே ஃப்ரெஷ்னெஸா இருக்கும்னு நினைச்சு பார்த்ததில்ல. 'முகவரி' பண்ணும்போது நான் என் கல்லூரி படிப்பைக் கூட முடிக்கல. எனக்கு அப்ப 22 வயசுதான். யார்கிட்டயும் ஒர்க் பண்ணினதில்ல. சினிமா அனுபவமும் பக்குவமும் இல்லாத ஒரு வயசு. ஆனாலும் லெஜன்ட்ஸ் நிறைய பேர் இருந்தாங்க. அஜித் சார், கே.விஸ்வநாத் சார், பி.சி. சார், தேவா சார், பாலகுமாரன் சார்னு அத்தனை பேரையும் அழகா ஹேண்டில் பண்ணினதை இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும். தயாரிப்பாளர் சக்ரவர்த்தி சார் இல்லைன்னா இப்படி ஒரு படம் அமைஞ்சிருக்காது. முதல் படம் இயக்குறவங்களுக்கு பி.சி.சார் ஒளிப்பதிவாளரா அமைஞ்சா, அந்த இயக்குநர் அதிர்ஷ்டசாலிதான்.
'முகவரி'யில் மறக்க முடியாத நினைவுகள் நிறைய இருந்தாலும், அஜித் சார் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே ஒரு கார் பரிசளிச்சார். டப்பிங்கின்போது அஜித் சார் 'எனக்கு மறக்க முடியாத ஒரு படம் கொடுத்திருக்கீங்க. பொதுவா நான் நடிச்ச படங்களை பார்த்துட்டு என்னால முழுசா அதுல ஜெல் ஆக முடியாது. ஏன்னா, அதுல என்னோட குறைகள் மட்டுமே தெரியும். முதல் தடவையா என்னோட கரியரில் என்னை நானே உணர்றேன்.' ஒரு படத்தோட ஹீரோ அவரே படம் பார்த்துட்டு, அஜித் மாதிரியே தெரியலை கதாபாத்திரம் ஶ்ரீதராகவே நினைச்சு பார்க்க வச்சிடுச்சுன்னு சிலிர்த்து சொன்னபோதே ஒரு இயக்குநரா சந்தோஷமானேன்.
படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே எனக்கொரு கார் பரிசளிச்சார். சினிமாவுல கார் பரிசளிக்கிறது பெரிய விஷயமில்ல. படம் ரிலீஸ் ஆகி, ஜெயிச்ச பிறகுதான் கார் கிஃப்ட் பண்ணுவாங்க. ஆனா அஜித் சார் படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே, 'உங்களுக்கு ஒரு கார் பரிசளிக்கறேன்' சொன்னார். அந்த சமயத்தில் என்கிட்ட ஏற்கெனவே ஒரு கார் இருந்ததால அவர்கிட்ட எனக்கு கார் வேண்டாம் சார். உங்க அன்பே போதும்னு சொன்னேன். ஆனால் அவரோ, 'எனக்கு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கீங்க. உங்ககிட்ட சொன்னது மாதிரியே கார் தருவேன்.'னு சொல்லி, காரை பரிசளித்தார். சினிமாவை நேசிக்கற, உழைப்பைக் கொண்டாடும் ஒரு கலைஞனாக சொன்ன சொல்லைக் கடைபிடித்தார். படத்தின் டயலாக்கை பாலகுமாரன் சார் தான் எழுதியிருந்தார். அவரையும் ரொம்ப மிஸ் பண்றோம்.
அதைப் போல சிம்பு சாரை வைத்து நான் இயக்கின 'தொட்டி ஜெயா' படத்தின் ரிலீஸுக்கு முன்னரே தயாரிப்பாளர் தாணு சாரும் எனக்கொரு கார் பரிசளித்தார். சினிமாவுல ரெண்டு கார் கிஃப்ட் ஆக வாங்கினது நான் ஒருத்தனாதானிருப்பேன்!'' என்று கலகலக்கிறார் வி.இசட்.துரை.