சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!
Amaran: அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களின் நிதர்சனத்தை பேசவில்லையா? - காஷ்மீர் நடிகர் உமைர் பேட்டி!
`அமரன்' திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
`44RR' குழுவில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். `அமரன்' படத்தில் காட்சிப்படுத்திய இந்த குழுவின் நபர்களுடைய கதாபாத்திரங்களில் பல நட்சத்திரங்களும் களமிறங்கியிருந்தனர்.
அப்படி இந்த குழுவில் இருந்த காஷ்மீர் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் காஷ்மீரை சேர்ந்த உமைர் என்பவரை தமிழ்நாட்டிலேயே தேடி கண்டிபிடித்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தற்போதைய சோசியல் மீடியா டிரெண்ட் இவர்தான்! `அமரன்' படத்துக்காக வாழ்த்துகளைக் கூறி பீச்சோரம் காற்று வாங்கிக் கொண்டே உரையாடலை தொடங்கினோம். அழகான தமிழில் பேச தொடங்கியவர்...
கோலிவுட்டில் நடிக்கும் முதல் காஷ்மீர் நடிகர் என்ற விஷயம் உங்களுக்கு எந்தளவிற்கு பெருமையை கொடுக்கிறது?
இந்த விஷயம் எனக்கு அதிகளவில் பெருமையை தேடிக் கொடுத்திருக்கு. இந்த தருணத்தில் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்பு என்னுடைய கதாபாத்திரத்திற்கு கிடைக்குமென நான் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கல. காஷ்மீர் மக்களும் என்னை பாராட்டினார்கள். நான் ப்ராமிஸிங்கான விஷயங்களை நிகழ்த்தியுள்ளதாக ஃபீல் பண்றேன் (மென்மையாக சிரிக்கிறார்). அனைவரும் உறுதுணையாக இருப்பது எனக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுக்குது.
படத்துல நீங்கதான் காஷ்மீர் மக்கள் பேசுற விஷயங்களை சிவகார்த்திகேயனுக்கு மொழிபெயர்ப்பு பண்ணி சொல்வீங்க... படப்பிடிப்பு தளத்திலும் அப்படிதான் இருப்பீங்களா?
எல்லா நேரமும் இல்ல... வெளிய சுற்றும்போதுதான் நான்தான் டிரான்ஸ்லேட்டராக இருப்பேன். இப்போ வெளிய போகலாம்னு பிளான் பண்ணி போவோம். அப்போது நான்தான் டூரிஸ்ட் கைட். சிவகார்த்திகேயன் அண்ணா மட்டுமில்ல, புரொடக்ஷன், ஆர்ட் துறைனு பலரும் நான் காஷ்மீர்ல இருந்ததுனால என்கிட்ட சில விஷயங்களை கேட்பாங்க.
நீங்க காஷ்மீர்ல இருந்த சமயத்துலேயே இந்த `44RR'-னுடைய `Cheetah Camp' பற்றி தெரியுமா?
எனக்கு முன்பே தெரியும். நீங்க நினைக்கிற மாதிரி 44 ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸ் மட்டும் கிடையாது. 33 ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸும் இருக்காங்க. 26 ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸும் இருக்காங்க. கிராமப்புறங்கள்ல சுற்றும்போது அவங்களை நான் பார்த்திருக்கேன். என்னுடைய 13 வயசுல நான் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி கேள்விப்பட்டேன். எங்களுக்கு இதுமாதிரியான இழப்பு வந்தால் ஊரடங்கு மாதிரியான விஷயங்கள் இருக்கும். அப்போது எங்களுக்கு ஸ்கூல்ல இருந்து லீவ் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு 13 வயது பையனுக்கு விளையாடுறதுக்கும், கார்டூன் பார்க்கிறதுக்கும்தான் ஆசை இருக்கும். அதன் பிறகு சரியாக எனக்கு 23 வயது இருக்கும்போது `அமரன்' படத்துல நடிக்க கமிட்டானேன். அப்போதுதான் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `இந்த மாதிரி மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி தெரியுமா'னு கேட்டார். அப்புறம் என்ன நடந்ததுனு நான் உணர்ந்தேன்.
`அமரன்' படம் முழுமையாக ராணுவத்தின் பார்வையில் இருக்கு. மக்களுடைய நிதர்சனம் பற்றி படத்தில் காட்சிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் வந்தது. இந்த விமர்சனத்தை நீங்க எப்படி பார்க்கிறீங்க?
ஆமா, அந்த விமர்சனத்தை பார்த்தேன். கடைசியாக இது ஒரு கமர்சியல் திரைப்படம். ஒரு மேஜரைப் பற்றிய பயோபிக். தோனி பற்றிய பயோபிக் திரைப்படத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை தான் காட்டியிருந்தாங்க. காஷ்மீர்ல கல்வீசுதல் இருக்கு, போர்குணம் இருக்கு. அதுபோல மற்றொரு பக்கம் வகீத் மாதிரியான நபர்கள் ராணுவத்தினர்கூட இருக்காங்க. இப்படி சின்ன சின்ன விஷயங்களை படத்தில் காட்சிப்படுத்தியிருந்தாங்க. படத்துலகூட ஒரு காஷ்மீரியை ராணுவ வீரர் அவருடைய உயர் அதிகாரிகளை தாண்டி வந்து காப்பாற்றியிருப்பார். இந்த மாதிரியான விஷயங்களும் படத்துல இருக்கு. பயோபிக்காக பார்க்கும்போது எனக்கு காட்சிப்படுத்திய விஷயங்களெல்லாம் ஓகேதான்.
காஷ்மீர் மக்களோட நிதர்சன வாழ்க்கை எப்படி இருக்கும்?
இப்போ நீங்க ஒரு ராணுவ வீரர், நான் ஒரு தீவிரவாதினு வச்சிக்கோங்க.... நான் ஒருத்தருடைய வீட்டுக்குள்ள நுழைந்து அவங்கிட்ட `எனக்கு சாப்பாடு வேணும்'னு மிரட்டுறேன். அவங்க எனக்கு பயந்து சாப்பாடு கொடுத்திடுவாங்க. அதே நேரத்துல ராணுவத்தினருக்கு தகவல் கிடைச்சு அந்த வீட்டுக்கு வர்றாங்க. அப்போ `ஏன், இவங்களுக்கு அடைக்கலம் கொடுத்தீங்க'னு ராணுவ அதிகாரியான நீங்களும் அவங்களை கேள்வி கேட்பீங்க. மக்களால எவ்வளவுதான் தாங்கிக் கொள்ள முடியும். அப்படி சில நேரம் கல் வீசுவாங்க. இதுக்கு முன்னாடி வரைக்கும் நம்மளால எதுவும் பண்ண முடியாது. இதுதான் நம்ம வாழ்க்கைனு நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனால் இப்போ ஒரு 6 வருடமாக மக்களின் பார்வையும் புரிதலும் மாற்றமடைஞ்சிருக்கு.
காஷ்மீர்ல சினிமாக்கான நேரம் எப்படி இருக்கும்?
உண்மையை சொன்னால்....நான் முதன் முதலாக சினிமா பார்த்த இடம் சென்னைதான். அப்பா இங்க மகாபலிபுரத்துல பிசினிஸ் பண்ணீட்டு இருந்தாங்க. அப்போ லீவுக்கு நாங்க சென்னை வந்திருந்தோம். அப்போ `பஜ்ரங்கி பாகிஜான்' படம் முதன் முதலாக தியேட்டருக்கு வந்து பார்த்தோம். காஷ்மீர்ல 80 கள்ல தியேட்டர் இருந்தது. அதை காஷ்மீர் கைபற்றிட்டாங்க. இப்போ 2020-ல தான் புதிய தியேட்டர் ஒன்னு வந்தது. அங்க இருக்கிற மக்களுக்கு சினிமா பற்றி நிறைய விஷயங்கள். நீங்க சென்னைல இருக்கீங்க..அடிக்கடி படங்கள் தியேட்டர்ல போய் பார்ப்பீங்க. ஆனால், காஷ்மீர்ல் அப்படியான நிலைமை கிடையாது. அப்படி நான் இங்க வந்து எனக்கு ரஜினி சார், கமல் சார், விஜய் சேதுபதினு பலரையும் பிடிச்சது.
`அமரன்' ரிலீஸுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் என்னென்ன விஷயங்கள் சொன்னார்?
`பொறுமையாக இருங்க. உங்களுக்கு திறமை இருக்கு. வாய்ப்பு உங்களை தேடி வரும்'னு ரிலீஸுக்குப் பிறகு சொல்லியிருந்தார். அதுதான் உண்மையும். உங்களுக்கு திறமை இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு உங்களை தேடி வரும். அதுனால ப்ராசஸை நம்புங்க!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...