Aus Vs Ind : 'காயத்தால் பார்டர் கவாஸ்கர் தொடரிலிருந்து வெளியேறும் ஹேசல்வுட்?'- ஆஸிக்கு பின்னடைவு!
5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. பெர்த்தில் நடந்த அந்தப் போட்டியை இந்தியா வென்றிருக்கும் நிலையில் இரண்டாவது போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹேசல்வுட் காயம் காரணமாக அடிலெய்டு டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறார். தொடரின் மற்றப் போட்டிகளில் ஆடுவாரா என்பதும் சந்தேகமாகியிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலின் முக்கியமான தளபதி ஹேசல்வுட். குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவர். பெர்த்தில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும். அந்த இன்னிங்ஸில் ஹேசல்வுட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது அடிலெய்டு டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே? அந்த இன்னிங்ஸில் வெறும் 8 ரன்களை கொடுத்து 5 ஹேசல்வுட் வீழ்த்தியிருந்தார்.
2014 ஆம் ஆண்டில் அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரைக்கும் உள்ளூரில் அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை தவறவிட்டதே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியிலிருந்து விலகுகிறார். அவருக்கு இடதுபக்கத்தில் 'Side Strain' பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சொல்லியிருக்கிறது. தசைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயத்தால் வெளியேறும் ஹேசல்வுட் மூன்றாவது போட்டியிலிருந்து ஆடுவாரா என்பது இன்னும் சொல்லப்படவில்லை.
ஹேசல்வுட்டுக்கு பதிலாக சீன் அபாட், பிரெண்டன் டாகெட் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் சேர்த்திருக்கிறது. ஆனாலும் அணியில் ஏற்கெனவே இருக்கும் ஸ்காட் போலண்ட்டைத்தான் ஹேசல்வுட்டுக்கு பதிலாக லெவனில் எடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. எப்படியாயினும் ஹேசல்வுட் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவே.