சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
AUSvIND: `நான் வந்துட்டேன்னு சொல்லு' அதிரடி கோலி; தடுமாறும் ஆஸ்திரேலியா- பெர்த் டெஸ்ட் Day 3 Report
பெர்த் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஜெய்ஸ்வாலின் அசாத்திய இன்னிங்ஸ், கோலியின் சதம், நிர்ணயிக்கப்பட்ட பெரிய டார்கெட் என எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் என்னவெல்லாம் நடந்தது?
அரைசதத்தைக் கடந்திருந்த ராகுலும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தனர். முதல் பந்திலேயே ஒரு துரிதமான சிங்கிளுடன் தொடங்கினார் ஜெய்ஸ்வால். நேற்று முழுவதும் நின்று செட்டில் ஆகி விட்டதால் ஜெய்ஸ்வால் இன்றைக்கு ரொம்பவே சௌகரியமாக ஆடினார். ஹேசல்வுட்டின் பந்தை சிக்சராக மாற்றி சதத்தை எட்டி அசத்தினார். அவரின் முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இது. அதில் முதல் போட்டியிலேயே சதமடித்த விதம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. 'இந்திய கிரிக்கெட்டில் புதிதாக ஒரு நட்சத்திரம் உருவாகிவிட்டார். அவர் இன்னும் பல உச்சங்களை எட்டுவார்.' என வாசிம் அக்ரம் ஜெய்ஸ்வாலை உச்சி முகர்ந்து பாராட்டினார். கே.எல்.ராகுலும் பேட்டை விடாமல் தன்னுடைய நிதானமான ஆட்டத்தையே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், ராகுலிம் தடுப்பரணையும் தாண்டி ஸ்டார்க் அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ராகுல் 77 ரன்களில் இருந்தபோது கொஞ்சம் ஃபுல்லாக டைட்டாக வீசப்பட்ட பந்தை தடுத்து ஆட நினைத்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார் ராகுல். அவர் சதமடிக்கவில்லையெனினும் இது ஒரு அற்புத இன்னிங்ஸ்தான்.
176 பந்துகளை எதிர்கொண்டு அவசரப்படாமல் நின்று ஆடிய அவரின் அணுகுமுறைதான் இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தைக் கொடுத்தது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து 201 ரன்களை எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஓப்பனிங் இணை ஒன்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன் 1985-86 இல் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் சிட்னி டெஸ்ட்டில் கவாஸ்கரும் ஸ்ரீகாந்த்தும் இணைந்து 191 ரன்களை சேர்த்திருந்தனர். அதுதான் இதற்கு முன் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
ஸ்ரீகாந்த் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து வெளுத்திருந்தார்.117 பந்துகளில் 116 ரன்களை அடித்திருப்பார். டிராவில் முடிந்த அந்தப் போட்டியின் ஆட்டநாயகனும் ஸ்ரீகாந்த்தான். ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி பிரிந்த பிறகு படிக்கல் கொஞ்ச நேரம் நின்று ஆடினார். ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பெரிய இன்னிங்ஸை அவரால் ஆட முடியவில்லை. 25 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். நம்பர் 4 இல் விராட் கோலி வந்தார். இந்த முறை விராட் கோலியின் மீது எந்த அழுத்தமும் இல்லை. இந்திய அணி 321 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த சமயத்தில்தான் கோலி வந்தார். அந்த சமயத்தில் கோலி விரும்பியபடி ஆடுவதற்கான சுதந்திரம் இருந்தது. அதனால் கோலி ரொம்பவே ரிலாக்ஸாக ஆடினார்.
சில பந்துகளை அவரால் சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. ஆனால், அதெல்லாம் அவருக்கு எந்தக் கவலையையும் கொடுக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புள்ள பந்துகளிலெல்லாம் நல்ல ஷாட்களை ஆடினார். இடையில் ஜெய்ஸ்வாலும் 161 ரன்களில் மார்ஷின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஜெய்ஸ்வாலை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஆப் சைடில் 7 பீல்டர்களை வைத்து அந்த திசையிலேயே வீசி அவரை வீழ்த்தத் திட்டமிட்டனர். அதுதான் கைக்கொடுக்கவும் செய்தது. பேக்வர்ட் பாயின்ட்டில்தான் ஜெய்ஸ்வால் கேட்ச் ஆனார். அப்போது வர்ணனைப் பெட்டியில், 'நீண்ட காலத்துக்கு பேசும்படியான ஒரு இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் ஆடியிருக்கிறார்.' என்றார். ஆம், அதுதான் உண்மை.
தன்னுடைய முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலேயே இப்படியான பக்குவமிக்க சதமெல்லாம் ஆச்சர்யம்தான். பண்ட் லயனின் பந்தில் ஸ்டம்பிங் ஆக துருவ் ஜூரேல் கம்மின்ஸின் பந்தில் lbw ஆகினார். இருவரும் அடுத்தடுத்த பந்தில் அவுட் ஆகினர். இந்நிலையில்தான் நிதிஷ் ரெட்டியும் கோலியும் கூட்டணி சேர்ந்தனர். வேகவேகமாக ரன்கள் சேர்த்து ஒரு அசாத்திய டார்கெட்டை நிர்ணயித்து ஆஸ்திரேலியாவை இன்றே பேட்டிங் ஆட வைக்க வேண்டும் என்பதுதான் இந்திய அணியின் திட்டமாக இருந்தது. ஏற்கெனவே அயர்ச்சியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை இன்றே ஒரு கடைசி அரை மணி நேரம் ஆட வைத்தால் சில விக்கெட்டுகளை எடுக்கலாம் என்பதுதான் இந்தியாவின் எண்ணம். கோலியும் நிதிஷ் ரெட்டியும் அதற்கேற்றார் போலவே ஆடினர்.
நிதிஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடுவதை போலவே அதிரடியாக ஆடினார். 6 பீல்டர்களை லெக் சைடில் வைத்து லெக் ஸ்டம்பிலேயே வீசி அட்டாக் செய்த போதும் நிதிஷ் சரளமாக பெரிய ஷாட்களை ஆடினார். கோலியும் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து ஷாட்களை ஆடினார். ஸ்வீப்பையே அரிதாக ஆடும் கோலி இங்கே ரிவர்ஸ் ஸ்வீப்பெல்லாம் ஆடி பவுண்டரி அடித்தார். ஸ்வீப்பில்தான் அவரின் சதத்தையும் எட்டியிருந்தார். எந்த அழுத்தமும் இல்லாமல் நெருக்கடியும் இல்லாமல் ஆடினால் கோலியால் எவ்வளவு இலகுவாக ரன்களை சேர்க்க முடியும் என்பதை இந்த இன்னிங்ஸ் மூலம் அறிய முடிந்தது. கோலி சதத்தை எட்டியவுடனேயே பும்ரா டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 534.
இந்தியாவின் திட்டப்படியே கடைசி அரைமணி நேரத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. 4.2 ஓவர்களை மட்டுமே இந்தியா வீசியிருந்தது. ஆனால், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். முதல் ஓவரிலேயே மெக் ஸ்வீனியை lbw ஆக்கினார் பும்ரா. நைட் வாட்ச்மேனாக வந்த கேப்டன் கம்மின்ஸை சிராஜ் எட்ஜ் ஆக்க ஸ்லிப்பில் கோலி கேட்ச் செய்தார். இன்றைய நாளின் கடைசிப்பந்தில் லபுஷேனையும் பும்ரா lbw ஆக்கினார். நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 12-3 என்ற நிலையில் இருந்தது. இன்னும் வெற்றிக்கு 522 ரன்கள் தேவை. போட்டி முழுக்க முழுக்க இந்தியாவின் கையிலேயே இருக்கிறது. நாளையே மீதமிருக்கும் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கலாம்.